இறந்த குழந்தையின் முகத்தில் சிதைவு; எலி கடித்ததா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட், 2012 - 15:35 ஜிஎம்டி
கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை

கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை

சென்னை திருவல்லிக்கேணியில் இயங்கும் பிரபல அரசினர் கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் பன்னிரெண்டு நாட்களிலேயே உயிரிழந்த ஒரு குழந்தையின் முகம் சிதைந்து காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், தங்கள் குழந்தையை எலி கடித்து குதறிவிட்டதாக் கூறி முறையிட்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற துப்புரவுத் தொழிலாளியின் மனைவி மலருக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 15ம் நாள் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

எடை குறைவாய் இருந்து இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்ட அச்சிசுவின் உயிர் நேற்று மாலை பிரிந்தது.

ஆனால் உடலை ஒப்படைக்கத் தேவையான நிர்வாக நடைமுறைகளை செய்து முடிக்க போதிய மருத்துவர்கள் இல்லை, எனவே மறுநாள் காலை ஒப்படைக்கிறோம் என குடும்பத்தினரிடம் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் திங்கள்காலை உடலைப் பெற்றுக்கொள்ள வந்த குடும்பத்தினர் குழந்தையின் சிதைந்த முகத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக நம்மிடம் கூறினர்.

சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, பிறகு விசாரணை நடத்தப்படும் என நிர்வாகம் கூறியதாகவும், ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

மருத்துவமனையின் உயர் அதிகாரி ரமேஷ்குமார் "அது ஓர் இயற்கையான மரணமே, மேலும் அச்சிசுவிற்கிருந்த நோயின் காரணமாகவே முகம் சிதைந்திருக்கும், எலி கடித்துவிட்டது என்பதெல்லாம் தவறு" என்றார்.

எப்படியும் சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ரமேஷ்குமார் உறுதியளித்தார்.

ஒன்றுமே சிக்கலில்லை என்றால், நேற்றே உடலைப் பெற்றோரிடம் ஒப்படைத்திருக்கலாமே, பொதுவாக அரசு மருத்துவமனைகளைப் பராமரிப்பதில் போதிய அக்கறை காட்டப்படுவதில்லை என்ற விமர்சனத்திற்கு வலுசேர்க்கும் வகையிலேயே இன்றைய சம்பவம் அமைந்திருக்கிறது என்றூ நோக்கர்கள் கூறுகின்றனர்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.