கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தடியடி; கண்ணீர் புகைவீச்சு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 செப்டம்பர், 2012 - 13:27 ஜிஎம்டி
போராட்டக்காரர்கள்

தொடரும் போராட்டம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தினை முற்றுகையிட முயன்ற அப்பகுதி மக்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணிர்புகை வீசியும், தமிழக காவல்துறையினர் கூட்டத்தினைக் கலைத்துவிட்டனர்.

ஆனால் பெரிய அளவில் மோதல்களோ வன்முறையோ நிகழவில்லை. சிலர் கைதாகியிருக்கின்றனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்திலிருந்தே திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதை பல்வேறு தரப்பினர் எதிர்த்து வந்தனர்.

ஆனால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானில் ஃபுகுஷிமாவில் நிக்ழ்ந்த அணு உலை விபத்திற்குப் பின்னர் இந்த எதிர்ப்பு தீவிரமடைந்தது.

தொடரும் போராட்டம்

கடந்த 397 நாட்களாக அணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து நடந்துவருகிறது.

கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிறித்தவ தேவாலய வளாகத்தில் மக்கள் திரண்டு, நாள்தோறும் கூடி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

அணு மின்நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால் கடல் வெப்பமடைந்து மீன்பிடி பாதிக்கப்படும், தங்கள் வாழ்வாதாரம் அழிந்துவிடும் என்பதே அவர்களது முக்கிய வாதமாக இருந்தது.

தவிரவும் கதிரியக்கத்தின் விளைவாய் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் கூறினர்.

ஒரு கட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவே மக்களின் அச்சங்கள் போக்கப்படும்வரை அணுமின்நிலையம் இயங்க அனுமதிக்கப்படாது எனக் கூறினார். போராட்டம் இன்னமும் வலுப்பெற்றது. கூடங்குளத்தை ஒட்டிய பல்வேறு கடற்கரை கிராமங்களில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கட்டிடத்தொழிலாளர்கள் மின்நிலைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பணிகள் முடங்கின.

அரசு நிலைப்பாடு

ஆனால் மத்திய மாநில அரசுகள் நியமித்த வல்லுநர் குழுக்கள் அணுமின்நிலையத்தால் எவருக்கும் எவ்விதப்பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தன.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா இனி கட்டுமானப்பணிகள் தடைப்படுத்தப்படமாட்டாது என்று அறிவித்தார்.

அணுமின்நிலைய அருகாமையிலிருந்து அகற்றப்பட்ட போராட்டக்காரர்கள் இடிந்தகரை தேவாலய வளாகத்தில் தங்கள் போராட்டத்தினைத் தொடர்ந்தனர்.

சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பிருப்பதால் அணுமின்நிலையம் அமைய அனுமதிக்கக்கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட, மின் உற்பத்திக்கு முதற்கட்டமான எரிபொருள் நிரப்பும் பணி கூடங்குளத்தில் துவங்கவிருக்கிறது என மத்திய அரசு அறிவித்ததன் பின்னணியிலேயே எதிர்ப்பாளர்கள் தேவாலய வளாகத்திலிருந்து வெளியேறி அணுமின்நிலையத்தினை முற்றுகையிடப்போவதாக அறிவித்தனர்.

கடற்கரையில் திரண்டவர்கள்

ஞாயிற்றுக்கிழமை (செப்.10,2012) ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் திரண்டு கடற்கரை வழியே கூடங்குளத்தை நெருங்கியபோது காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.

ஞாயிறன்று இரவு முழுதும் மின்நிலைய வளாகத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையிலேயே அமர்ந்து அணு உலைக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பிய வண்ணமிருந்தனர்.

கலைந்துபோக மறுத்த அவர்கள் மீது திங்களன்று காலை "சிறிய அளவில் தடியடி" நடத்தியதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டதாகவும் இதிலிருந்து தப்புவதற்காக இளைஞர்கள் சிலர் கடலில் குதித்ததாகவும் அப்போது ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் தரப்பில் சிலரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.

எதிர்ப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கூடங்குளம் பகுதியில் ஓரிரு கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டதாகவும் அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுவிட்டதாகவும், மற்றபடி தற்போது நிலை மாமூலாகிவிட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

போராட்டக்குழுவின் தலைவர் உதயகுமாரை காவல்துறையால் கைதுசெய்யமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.