ராமதாஸ் மீதான தடைக்கு கருணாநிதி கண்டனம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 22 ஜனவரி, 2013 - 10:21 ஜிஎம்டி
டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மதுரை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்குள் நுழையக்கூடாது என அவ்விரு மாவட்ட ஆட்சித் தலைவர்களும் உத்திரவு பிறப்பித்திருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வன்னியர்களுக்கும் தலித்துகளுக்குமிடையே நடந்த ஒரு மோதலில் தலித் மக்கள் சிலரது வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது, இரு தரப்பிலும் ஏழு பேர் காயமடைந்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஸ் குமார் டாக்டர் ராமதாஸ் மற்றும் வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டி குரு ஆகிய இருவரும் இரண்டு மாதங்களுக்கு கடலூர் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என ஆணையிட்டுள்ளார்.

ராமதாசின் நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் எனக்கூறி அவர் மதுரை மாவட்டத்தில் நுழைவதற்கு ஜனவரி ஏழாம் நாளன்று தடைவிதிக்கப்பட்டது.

இத்தடையாணைகள் குறித்து இன்று இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் திமுக தலைவர் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ் கொஞ்சம் வரம்பு கடந்து பேசக்கூடியவர் என்பது உண்மை யென்றாலும், அதற்காக ஒரு மாவட்டத்திற்குள்ளேயே நுழையக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவு பிறப்பிப்பது கண்டிக்கத்தக்கது எனக்கூறியிருக்கிறார்.

அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக மாவட்ட ஆட்சியர்கள் அப்படிப்பட்ட உத்தரவினை பிறப்பித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். இதை பார்க்கும் போது சுதந்திரம் பெற்ற இந்தியாவிலே இருக்கிறோமா, இந்திய அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பேணப்படுகின்றனவா என்பதே ஐயப்பாடாக உள்ளது என்று கூறும் கருணாநிதி இந்த ஆட்சியில் தான் எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு, குண்டர் சட்டம் என்று பிடிக்காதவர்கள் மீதெல்லாம் வழக்கு தொடுத்து வருகிறார்கள். அதுவும் போதாதென்று இப்படியொரு நடவடிக்கை எடுப்பது சரியா என்று ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மிரட்டல்

ஒரு வேளை வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை மனதிலே கொண்டு எதிர்க்கட்சிகளை மிரட்டு வதற்காக இப்படியொரு நடவடிக்கையா என்பதும் புரியவில்லை. எனினும் ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரத்திற்கெதிராக மாவட்ட ஆட்சியர்களே சட்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு குறிப்பாக சில கட்சிகளின் தலைவர்களை மாவட்டத்திற்குள்ளே நுழையக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பிப்பது முறையல்ல, எனவே இந்த ஜனநாயக விரோத செயலை தான் வன்மையாக கண்டிப்பதாக கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஆனால் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் எவரும் ராமதாஸ் மீதான தடையாணை குறித்து கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தர்மபுரியில் நிகழ்ந்த தலித் மக்களுக்கெதிரான கலவரத்திற்குப் பிறகு டாக்டர் ராமதாஸ் தலித் அல்லாதோரை இணைத்து, புதிதாக அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற ஓர் அமைப்பினை உருவாக்கி, தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும், பிற சாதிப் பெண்களை தலித் இளைஞர்கள் ஏமாற்றித் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளுக்கு ராமதாஸ் ஆதரவு திரட்டிவருகிறார் அத்தகைய முயற்சிகளுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது,.

பாமக தரப்பிலிருந்தும் கடலூர் ஆட்சியர் உத்திரவு குறித்து கருத்தெதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.