வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 பிப்ரவரி, 2013 - 15:39 ஜிஎம்டி

கண்ணிவெடித் தாக்குதல் மூலமாக 22 காவல்துறையினரைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் நால்வரின் கருணை மனுக்களை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார்.

தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு என்ற இடத்தில் 1993 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதல் தொடர்பில் ஞானப்பிரகாஷ், சைமன், மீசை மாதையன் மற்றும் பிளவேந்திரன் ஆகிய நான்கு பேருக்கு மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் மேல் முறையீடு செய்தபோது, அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 22 பேரை கொன்றவர்களுக்கு ஏன் தூக்கு தண்டனை அளிக்கப்படக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து கர்நாடக அரசு தூக்கு தண்டனை கோரி மனு செய்தது. அம்மனு ஏற்கப்பட்டு இவர்கள் நால்வருக்கும் 2004 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டது. அதன் பிறகு இவர்கள் ஜனாதிபதியிடம் கருணை மனு செய்திருந்தனர். இம்மனுவை ஜானாதிபதி இன்று நிராகரித்துவிட்டதாக பெல்காம் சிறைச்சாலையில் உள்ள இவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழக பொதுச் செயலாளர் பாலமுருகன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்கள், கருணை மனு மீது முடிவெடுக்க அதிக அளவு காலதாமதமானதை சுட்டிக் காட்டி, தூக்கு தண்டனைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது போல இவர்கள் சார்பிலும் வழக்குத் தொடரப்படும் என்றும் பாலமுருகன் தெரிவித்தார்.

இந்தியாவில் அரிதினும் அரிதான வழக்குகளில்தான் மரண தண்டனை அளிக்கப்படுகிறது. சமீபத்தில் மும்பை தாக்குதலாளி கசாப் மற்றும் நாடாளுமன்ற தாக்குதலோடு சம்மந்தப்பட்ட அப்சல் குரு ஆகிய இருவரும் மிக ரகசியமாக தூக்கிலிடப்பட்டனர். வீரப்பனின் கூட்டாளிகளைப் பொறுத்தவரை ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட விடயம் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் பிளவேந்திரனின் மகளான, ஜோஸ்பைன் பாஸ்கா மேரி, இது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார். தனது தந்தை வீரப்பனோடு எவ்வித தொடர்பும் வைத்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.