'வீரப்பன் மனைவிக்கு பணம் தர ''வனயுத்தம்'' தயாரிப்பாளர் ஒப்புதல்'

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 பிப்ரவரி, 2013 - 16:35 ஜிஎம்டி

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ''வன யுத்தம்'' படத்தின் தயாரிப்பாளர்கள், வீரப்பனின் மனைவிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க ஒத்துக் கொண்டுள்ளனர்.

வீரப்பனின் வாழ்க்கையை பற்றிய வன் யுத்தம் என்ற படம் இன்று முதல் திரையிடப்படுகிறது. இந்தப் படம் வீரப்பனின் குடும்பத்தின் அந்தரங்கத்தை மீறுவதாக இருப்பதுடன் வீரப்பனின் மகள்களின் திருமணத்துக்கும் பிரச்சனைகளைத் தரக்கூடியது என்று கூறி, அவரின் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

முதலில் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 4 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட அனுமதி அளித்தது.

இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினார். இவ்வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட பென்ச் இரு தப்பினரும் இவ்விடயத்தை பேசித் தீர்க்க வேண்டும் என்று யோசனை கூறியது.

“இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இரு தரப்பும் இந்த விடயம் குறித்து பேசி ஒரு உடன்படிக்கைக்கு வருமாறு சொன்னார்கள். 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டும் பட்சத்தில் வழக்கை திரும்பப் பெறுவது என்று நாங்கள் முடிவு செய்தோம். இதன் படி நாளை சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் அவர்கள் பணத்தைக் கட்ட வேண்டும். இது இரு தரப்பையும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாகும். இறந்து போன ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் உயிரோடு இருக்கும் அவரின் உறவினர்களை பாதிக்கிறது”. என்றார் முத்துலட்சுமியின் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே.

இந்தப் படம் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நீதிமன்றத்தில் நிருபிக்கப்பட்டிருக்கவில்லை என்றும் முத்துலட்சுமியின் சார்பில் வாதிடப்பட்டது.

அதையடுத்து இந்தப் படம் காவல்துறையிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்றும் மூன்று செய்தித் தாள்களில் விளம்பரம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக என்றும் சன்ஞய் ஹெக்டே தமிழோசையிடம் தெரிவித்தார்.

வீரப்பனின் மனைவி முப்பதுக்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தார். தற்போது நஷ்ட ஈடு கொடுக்க படக் குழுவினர் முனவந்துள்ள நிலையில் அதை வற்புறுத்தப் போவதில்லை என்றும் சஞ்சய் ஹெக்டே தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட படத்தின் இயக்குனர் ரமேஷ், பணம் பெற மட்டுமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தெரிவதாகக் கூறினார்.

ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள வீரப்பனின் 4 கூட்டாளிகள் உட்பட பலரை நேரில் சந்தித்துப் பேசி இந்தப் படத்தை எடுத்துள்ளதாகக் கூறிய அவர், நடந்த சம்பவங்களை அப்படியே மக்கள் முன் கொண்டு வருவதே தனது நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.