மருந்துகளுக்கு காப்புரிமை: இந்திய உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

புற்றுநோய்க்கான மருந்து தொடர்பில், இந்திய உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. பிரபல ரத்த புற்று நோய் மருந்தான க்ளீவெக்கிற்கு இந்தியாவில் காப்புரிமை இல்லை என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

ஸ்விட்சர்லாந்து நாட்டின் மருந்து தயாரிப்பு பெரு நிறுவனமான நோவார்டிஸ், புற்று நோய்க்கான புதிய வடிவிலான இந்த மருந்துக்கு காப்புரிமை கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இந்திய சட்டங்களின் கீழ் 'க்ளீவெக்' எனும் அந்த மருந்து காப்புரிமை பெரும் தகுதியை பெறவில்லை என்று இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று(1.4.13) தீர்ப்பளித்தது.

அம்மருந்தொன்றும் ஆழமான ஆய்வின் விளைவாய் உருவான புதிய மருந்தல்ல, மாறாக ஏற்கெனவே காப்புரிமை காலாவதியாகியிருந்த அம்மருந்தில் சில மேலோட்டமான மாற்றங்களைச் செய்து மீண்டும் அதற்குக் காப்புரிமை பெற நோவார்ட்டிஸ் முயல்கிறது, இதற்கு காப்புரிமை வழங்கப்பட்டால் அதன் விலை வானத்தை எட்டும், ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவர் எனக் கூறி இந்தியக் காப்புரிமை வாரியம் 2009 ஆம் ஆண்டில் காப்புரிமை மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது நோவார்ட்டிஸ்.

"வித்தியாசமானது இல்லை"

Image caption புற்றுநோய் மரபணுவின் அமைப்பு

புதிய மருந்து அதன் முந்தைய வடிவத்திலிருந்து போதுமான வகையில் வித்தியாசமானது அல்ல என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

க்ளீவெக் என்ற பெயரைப் பயன்படுத்தாது, ஆனால் அதே விதமான மருந்தை தயாரிக்கும் இந்திய நிறுவனங்களான ரான்பாக்சி, சிப்லா போன்றவை பல்வேறு தன்னார்வக்குழுக்களும் நோவார்ட்டிசிற்கு எதிராக வாதாடின.

நோவார்ட்டிசின் க்ளீவெக்கை ஒரு மாதத்திற்கு ஒருவர் உட்கொள்ள, 1.2 இலட்ச ரூபாய் செலவாகுமென்றால் அதே அளவு மருந்தை வர்த்தகப் பெயரில்லாமல் இந்தியாவில் வெறும் 8,000 ரூபாய்க்கு வாங்க முடியும் என வழக்கு விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் இந்தத் தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள நோவார்ட்டிஸ் நிறுவனம், இது எதிர்காலத்தில் மருத்துவத்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் முன்னெடுக்கப்படுவதற்கு ஊக்குவிப்பு இல்லாமல் செய்துவிடும் என்று கூறியுள்ளது.

வரவேற்பு

வளர்ந்துவரும் நாடுகளில், மரபு ரீதியான மருந்துகள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறையில் குறைந்த விலையில் கிடைக்க பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தும் என்று செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

இந்திய சட்டங்களின்படி உண்மையிலேயே நீண்ட ஆய்வுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படும் மருந்துகளுக்குக் காப்புரிமை கிடைக்கும் என்று பழைய கண்டுபிடிப்புகளுக்கு மேற்பூச்சை மாற்றி மீண்டும் காப்புரிமை பெற்று கொள்ளை இலாபம் பெறும் முயற்சிக்கே இன்றைய தீர்ப்பு முற்றுப்புள்ளிவைத்துவிட்டன என்கின்றனர் ஆர்வலர்கள்.

இது உலக அளவில் நோயாளிகளுக்குப் பெரும் வெற்றி என்றும் கருதப்படுகிறது.