ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க திமுக அழுத்தம்

  • 24 ஏப்ரல் 2013
Image caption இலங்கைத் தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று திமுக கோருகிறது.

இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று திமுக பல்தரப்பினருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை(26.4.13) லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் அமைச்சர்களின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்த உச்சிமாநாடு இலங்கையில் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கோரி, அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தூதர்களை திமுகவினர் புதுடில்லியில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதன்கிழமை ஆஸ்திரேலிய உட்பட பல நாட்டு தூதர்களை சந்துத்து உரையாடியதாகவும் அவர்கள் தமது வேண்டுகோளை பரிசீலிப்பதாக தெரிவித்ததாகவும், திமுக நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி ஆர் பாலு பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Image caption இந்தியாவின் முடிவு என்ன என்று கேள்விகள்

எனினும் இந்தியா இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டினை எடுத்துள்ளது என்பது இதுவரை வெளியாகவில்லை.

இந்தியாவும் இலங்கையில் இந்த மாநாடு நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் எனக் கோரும் வகையில், நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்துக்கான கோரிக்கையையும் திமுக விடுத்துள்ளது என்றும் பாலு கூறுகிறார்.

நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இது குறித்து தொடர்ந்து பேசப்படும் எனவும் திமுக தெரிவித்துள்ளது.