பாகிஸ்தான் சிறையில் இந்தியர் தாக்கப்பட்டது கவலை தருகிறது: மன்மோகன்

  • 27 ஏப்ரல் 2013

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்துவருகின்ற இந்தியர் சரப்ஜித் சிங் சில கைதிகளால் தாக்கப்பட்டு சுயநினைவு இழந்து கோமா நிலையில் இருப்பது மிகுந்த வேதனைக்குரிய சோகம் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

சரப்ஜித் சிங் சிறைக்குள் தாக்கப்பட்ட விதம் பற்றி முழு விவரங்களும் இன்னும் தெளிவடையவில்லை என்றாலும், செங்கற்களாலும், கத்தி போன்ற கூரிய ஆயுதங்களினாலும் அவர் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

லாகூரின் ஜின்னா சிறைக்குள் அவரும் வேறு சில கைதிகளும் ஒரு மணிநேரம் இடைவேளையில் தமது சிறை அறையிலிருந்து வெளியில் விடப்பட்டபோது இத்தாக்குதல் நடந்துள்ளது.

கொலை செய்ய முயன்றனர் என்ற குற்றச்சாட்டு இரண்டு கைதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. சிறையின் அதிகாரிகள் இரண்டு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் தலையில் மோசமான காயங்களும், உடலுக்குள் ரத்தக் கசிவுகளும் ஏற்பட்டுள்ள சரப்ஜித் சுயநினைவு இழந்து கோமா ஆழ்மயக்க நிலையில் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சரப்ஜித்துக்கு நேர்ந்ததை அறிந்து கவலைகொண்டுள்ள அவரது குடும்பத்தார் அவரைப் பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்றுவர அந்நாட்டு அதிகாரிகள் விசா கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

சரப்ஜித்துக்கு சில காலமாகவே அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவந்தது என்பதால், இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் என்று அவர்தம் குடும்பத்தார் கூறுகின்றனர்.

சரப்ஜித் தாக்கப்படலாம் என்று இந்திய அரசிடம் தாங்கள் புகார் தெரிவித்திருந்தும் தாக்குதலைத் தடுக்க இந்திய அரசு தவறிவிட்டது என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சரப்ஜித் சிங் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானில் சிறையில் இருந்துவருகிறார். இந்தியாவுக்காக பாகிஸ்தானில் வேவு வேலைப் பார்த்தார் என்றும் 14 பேர் கொல்லப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி இவர்.

பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங்.

தவறுதலாக பாகிஸ்தான் பகுதிக்குள் இவர் நுழைந்துவிட்டாரே ஒழிய இவர் குற்றமற்றவர் என அவரது குடும்பத்தினர் கூறிவருகின்றனர்.

கடந்த காலங்களில் சரப்ஜித் விவகாரம் பல முறை அரசியல் உயர்மட்டத்தில் அடிபட்டிருந்தது என்றாலும், இந்தியா பாகிஸ்தான் இடையிலான உறவில் ஏற்பட்ட மாறுதல்களுக்கேற்ப இவரது நிலையும் அல்லாடி வந்துள்ளது.

சரப்ஜித் மன்னிக்கப்பட்டு, அவரது மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே கோரியிருந்தார்.

அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் சரஃப்ஜித்துக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நிறுத்திவைத்திருந்தார்.

கடந்த காலங்களிலும்கூட பாகிஸ்தானின் இஸ்லாமியவாதக் குழுக்களிடம் இருந்து சரப்ஜித் எதிராக அச்சுறுத்தல்கள் வந்திருந்தன.

இந்தியாவில் நாடாளுமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் காஷ்மீரைச் சேர்ந்த அஃப்ஸல் குருவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலாளிகளில் உயிரோடு இருந்த ஒரே துப்பாக்கிதாரியான அஜ்மல் கசாப்பும் அண்மையில் தூக்கிலிடப்பட்டதை அடுத்து சரப்ஜித் சம்பந்தமாக பதற்றங்கள் அதிகரித்திருந்தன என்று அவரது குடும்பத்தார் கூறுகின்றனர்.