சரப்ஜித்தை சிகிச்சைக்காக அனுப்பச் சொல்லி பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

  • 29 ஏப்ரல் 2013
குடும்பத்தார் லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித்தை பார்த்தனர்
Image caption குடும்பத்தார் லாகூர் மருத்துவமனையில் சரப்ஜித்தை பார்த்தனர்

பாகிஸ்தானின் லாகூர் சிறைச்சாலையில் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சரப்ஜித் சிங்கை மருத்துவ சிகிச்சைக்காக மனிதாபிமான அடிப்படையில் இந்தியாவுக்கு அனுப்ப பாகிஸ்தான் அரசு முன்வர வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

சரப்ஜித் சிங்குக்கு இந்தியாவில் சிறப்பான மருத்துவ வசதிகள் கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு, அனுதாபத்துடனும், மனிதாபிமான நோக்கிலும் பாகிஸ்தான் இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும் என்று இந்தியா கேட்டுள்ளது.

சரப்ஜித் சிங் தற்போது சிகிச்சை பெற்றுவரும் லாகூர் ஜின்னா மருத்துவமனை அதிகாரிகளுடன் தற்போது இந்திய தூதர அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

லாகூர் சிறையில் மரண தண்டனைக் கைதியாக பல ஆண்டுகளைக் கழித்துள்ள சரப்ஜித் சிங், கடந்த வெள்ளிக் கிழமையன்று சக கைதிகள் ஆறு பேரினால் தாக்கப்பட்டார்.

செங்கற்கள் மற்றும் கூரான தகரத்தால் தாக்கப்பட்டதில் தலையில் காயமடைந்த சரப்ஜித் சிங் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

தற்போது அவருக்கு அங்கே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சரப்ஜித் சிங்கின் உறவினர்கள் சிறப்பு விசா பெற்று லாகூர் சென்றுள்ளனர்.

கடந்த 1980ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 14 பேர் கொல்லப்படக் காரணமான ஒரு குண்டு வெடிப்புத் தொடர்பில் சரப்ஜித் சிங் கைதுசெய்யப்பட்டார்.

அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அதன் பிறகு அவர் அளித்த கருணை மனுக்கள் நீதிமன்றத்தாலும், பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப்பாலும் நிராகரிக்கப்பட்டு விட்டன.

சரப்ஜித் சிங் குற்றம் புரியவில்லை என்றும் அவர் இக்குற்றத்தில் தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்