சிபிஐ மீது உச்சநீதிமன்றம் சாடல்

  • 30 ஏப்ரல் 2013
Image caption சிபிஐ மீது உச்சநீதிமன்றம் சாடல்

இந்திய உச்சநீதிமன்றம் மத்திய புலனாய்வுத்துறை, சிபிஐயினை அரசியல் தலையீட்டிலிருந்து காப்பது தனது முதல் கடமை எனத் தெரிவித்திருக்கிறது.

நிலக்கரி சுரங்க ஏல முறைகேடு தொடர்பான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் முன் அது பற்றி மத்திய சட்ட அமைச்சருடன் விவாதித்ததாக சிபிஐ ஒப்புக்கொண்டிருப்பது தங்களுக்குப் பேரதிர்ச்சியை அளிப்பதாகவும் நீதிபதி ஆர்.எம்.லோத்தா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இன்று செவ்வாய் கூறியது.

சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா அண்மையில் விசாரணை நிலவரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினில் தனது அறிக்கை குறித்து சட்ட அமைச்சருடனும் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடனும் விவாதித்ததாகக் கூறியிருந்தார். அதே நேரம் இனி அப்படிச் செய்யமாட்டோம் எனவும் உறுதியளித்திருந்தார்.

நிலக்கரி சுரங்கம் தோண்டும் பணியினை ஏலத்திற்கு விட்டதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெறுவதாக மத்தியக் கணக்காயரே குறை கூறியிருக்கிறார், அது குறித்து உச்ச நீதி மன்றத்திலும் விசாரிக்கப்பட்டுவருகிறது.