கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி

கூடங்குளம் அணுமின் நிலையம்
Image caption கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க அனுமதி அளித்து நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக்குமார் ஆகியோர் அடங்கிய இந்திய உச்சநீதிமன்ற அமர்வு திங்கள் காலை தனது தீர்ப்பினை வழங்கியது.

மின் உற்பத்தியாகும் அணு உலை தொடர்பான பாதுகாப்பு குறித்து ஆராயவென அமைக்கப்பட்ட அனைத்து நிபுணர் குழுக்களும், அணு உலையின் பாதுகாப்பு குறித்து திருப்தி தெரிவித்திருப்பதையும், உலை பாதுகாப்பாக செயல்படத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை தாம் மதிப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், எரிசக்தித் தேவைக்காக அணு உலையில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை பாதுகாப்பாக சேமிக்கும் முறையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

பின்னணி

Image caption இந்திய உச்சநீதிமன்றம்

பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அணு உலை எதிர்ப்பாளர்கள் தொடர்ந்த இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் நாள் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதில் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்த முதலாவது அணு உலையை இந்திய-ரஷ்ய நாடுகளின் அணுசக்திக் அமைப்புகள் கூட்டாகச் செயல்படுத்தி வருகின்றன.

முதலாவது அணு உலை செயல்படத் தொடங்கிய ஆறாவது மாதத்தில் இரண்டாவது அணு உலை செயல்படும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய ஃபுகுஷிமா உலை விபத்துக்குள்ளானதிலிருந்து, கூடங்குளம் பகுதியில் 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அணுமின் நிலையத்திற்கெதிரான போராட்டம் தீவிரமாகியது.

முதற்கட்டத்தில் ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியபோது, பல்வேறு ஆலோசனைகளைக் கூறி உயர்நீதிமன்றம் ஆர்வலர்களின் மனுக்களை நிராகரித்தது.

மேல்முறையீடு

"அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம் ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு. இந்த வாரியமும், மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நன்றாக பரிசீலித்து தத்தம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.இந்த உத்தரவுகள் எல்லாம் தன்னிச்சையானது என, கருதுவதற்கு முகாந்திரமில்லை. கூடங்குளம் பகுதிக்காக, 500 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வெளியேற்றப்படும் மாசின் தரத்தை பேணுதல், சட்டப்படியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதை, ஒழுங்குமுறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில், பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது, முன்னெச்சரிக்கை பயிற்சிக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஒழுங்கு செய்யவேண்டும்." என்றெல்லாம் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

இதனையடுத்து பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

"கூடங்குளம் அணுமின் நிலையத்தில், குறிப்பிட்ட சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது.ஆனால், அப்பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தாமலேயே, மின் உற்பத்தியை துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அணுக்கழிவுகளை எங்கு கொட்டுவது, இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெளிவு படுத்தப்படவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்." என தங்கள் மேல்முறையீட்டு மனுவில் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

ஆனால் நிபுணர் குழுக்கள் ஒருமித்து அணுமின் நிலையம் பாதுகாப்பானது எனக் கூறியிருப்பதால் மின் உற்பத்தி துவங்குமென நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர் .