கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்

  • 13 மே 2013
கே. சித்தாராமையா
Image caption கே. சித்தாராமையா

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் ஆளுநர் பரத்வாஜ் முன்னிலையில் சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு நிகழ்வில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த வாரம் நடந்த சட்டசபைத் தேர்தலில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி 224 ஆசனங்களில் 121 ஆசனங்களைக் கைப்பற்றி பெருவெற்றி பெற்றது.

ஆளுங்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சியால் 40 ஆசனங்களை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தது.

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியும் 40 ஆசனங்களை வென்றுள்ளது.

தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி நடத்திய ஒரேயொரு மாநிலமாக கர்நாடகமே இருந்தது.

பின்தங்கிய சமூகமொன்றைச் சேர்ந்த சித்தராமையா ஆரம்பத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்தார்.

7 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகிய அவர், பின்னர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இயக்கமொன்றைத் தொடங்கி பணியாற்றிவந்தார்.

பின்னர் காங்கிரஸில் இணைந்துகொண்ட அவர், பாஜக ஆட்சியின்போது சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாஜகவுக்கு முந்தைய மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சிகளின்போது, சித்தராமையா நிதியமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.