உணவுப் பாதுகாப்பு சட்டத்திற்காக சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்ட முடிவு

நாடெங்கும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவு கிடைக்க இச்சட்டம் வகைசெய்யும்
Image caption நாடெங்கும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவு கிடைக்க இச்சட்டம் வகைசெய்யும்

இந்திய மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டுபங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான உணவு பாதுகாப்பு சட்ட மசோதா, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வியாழக்கிழமை அறிவித்தார்.

இந்த உணவுப்பாதுகாப்பு சட்டமூலம் இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து நிலவிய செயற்படாதன்மை காரணமாக இந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.

அதுமட்டுமல்ல, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருக்கும் கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவளித்துவரும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் இந்த சட்டத்தின் நடைமுறை சாத்தியம் குறித்து தயக்கத்தை வெளிப்படுத்திவருகின்றன. மேலும் வலதுசாரி பொருளாதார நிபுணர்களும் இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவைப்படும் நிதி ஆதாரங்கள் நாட்டின் பொருளாதாரத்தில் தாங்கமுடியாத சுமையை தோற்றுவிக்கும் என்று வாதாடி வருகிறார்கள்.

அதேசமயம், ஆளும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் சோனியா காந்தி இந்த திட்டத்தை கொண்டுவருவதன் மூலம் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் உணவுப் போஷாக்கின்மை பிரச்சனையை இந்த திட்டம் போக்கும் என்றும் வாதாடி வந்தார்.

இந்த பின்னணியில், இந்த உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து அதற்காக மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கவில்லை என்று தெரிவித்த சிதம்பரம், உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக்கூட்ட முடிவெடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி, அவர்களின் ஆதரவோடு உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மீண்டும் ஒரு முறை முயற்சிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்காக, இந்திய நாடாளுமன்றக் கூட்டம் சற்று முன்கூட்டியே கூட்டப்பட்டு, அந்த சிறப்புக் கூட்டத்தில் உணவு பாதுகாப்பு மசோதாவை எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்ற மத்திய அரசி முயற்சி செய்யும் என்று சிதம்பரம் தெரிவித்தார்.

இந்த சட்டத்தின்கீழ் உணவுதானியம் என்பது அடிப்படை உரிமையாக்கப்படுகிறது. சுமார் 80 கோடி மக்களுக்கு ஆளுக்கு ஐந்துகிலோ உணவுதானியங்களை மானியவிலையில் கொடுக்க இது வழி செய்கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இன்னமும் பட்டினிச்சாவுகள் தொடர்வதாகவும், குழந்தைகளிடம் போஷாக்கின்மை பெரும் பிரச்சனையாக தொடர்வதாகவும் செய்திகள் வெளியாகும் பின்னணியில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் பயனுள்ள பங்களிப்பை செய்யும் என்று நம்பிக்கை வெளியிடும் பொருளாதார பேராசிரியர் சீனிவாசன், இதில் பெருமளவு ஊழல் நடக்காமல் பார்த்துக்கொண்டால் மட்டுமே இதனால் உரிய பலன் கிடைக்கும் என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை