சவுதி தமிழர்களுக்கு உதவுமாறு கருணாநிதி கோரிக்கை

திமுக தலைவர் மு கருணாநிதி சவுதி அரேபிய தமிழர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

பத்து சத பணியிடங்கள் அந் நாட்டினருக்கே என்பதை உறுதிசெய்யும் "நிதாகத்" என்ற சட்டம் சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறித்து இன்று வியாழன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி, அச்சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது பல ஆண்டுகளாக அங்கே பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் பாதிக்கப்படுவர் என்றும் எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் தேதிக்குள், 60 ஆயிரம் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்படவிருக்கிறார்கள் என்றும் அவர்களில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழர்கள் என்றும் கூறினார்.

அதைப் போலவே குவைத் நாட்டிலே பணிபுரியும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தமிழர்களில் பலர் வெளியேற்றப்படும் நிலைமை உருவாகியுள்ளது. அவர்களெல்லாம் தத்தம் குடும்பத்தினரோடு அங்கே குடியேறி அந்த நாடுகளோடு ஐக்கியமாகி விட்டவர்கள். அவர்கள் தொடர்ந்து அங்கேயே பணியாற்ற இந்திய அரசும், தமிழ் மாநில அரசும் உதவிட முன் வர வேண்டுமென்று விரும்புகிறார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, அவர்கள் தொடர்ந்து அந்த நாடுகளில் வாழவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும், தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று தனது அறிக்கையில் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார்.