நிலத்தடி மீத்தேன் எடுக்கும் பணிகளை இடைநிறுத்த ஜெ. உத்தரவு

  • 17 ஜூலை 2013
விவசாயிகளுக்கு சிறிய பாதிப்பு என்றாலும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது
Image caption விவசாயிகளுக்கு சிறிய பாதிப்பு என்றாலும் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது: ஜெ.

தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி மீத்தேன் வாயு எடுப்பது தொடர்பான பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார்.

இத்திட்டத்தினால் விவசாயம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே, அத்திட்டம் அமல்படுத்தப்படலாம் என இன்று புதன்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு எடுக்கவென கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டில் மத்திய அரசு உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டது.

2011-இல், முந்தைய திமுக அரசு நான்கு ஆண்டுகளுக்கு டெல்டா பகுதியில் பெட்ரோலிய ஆய்வு மேற்கொள்ளும் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு வழங்கியது.

இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்களில் அத்திட்டம் நிலத்தடி நீரையே மாசுபடுத்தும் என்றும், இன்னும் பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் விவசாயம் நசியும் எனவும் கவலை தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகமோ விவசாயிகளால் எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு விளக்கங்கள் எதையும் அளிக்காமல் ஒரு சில நிபந்தனைகளுடன் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் குறை கூறுகிறார்.

எப்படியும் மத்திய அரசின் அனுமதி கிடைத்திருந்தாலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆய்வுப் பணிகளை துவங்குவதற்கான அனுமதியை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தான் வழங்க வேண்டும், அந்த அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

'அமெரிக்காவின் பவுடர் ரிவர் பேசின் பகுதியில் மோசமான சுற்றுச்சூழல் விளைவுகள்'

Image caption நிலத்தடி மீத்தேன் வாயு அகழ்வு தொடர்பில் விவசாயிகள் எழுப்பிய ஐயங்களுக்கு மத்திய அரசு விளக்கமளிக்கவில்லை என்கிறார் தமிழக முதல்வர்

டெல்டா பகுதி நில அமைப்பு அமெரிக்காவின் வயோமிங் மற்றும் மோன்டானா மாநிலங்களில் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கப்படும் பவுடர் ரிவர் பேசின் பகுதியினை ஒத்திருப்பதாக கிரேட் ஈஸ்டர்னே தெரிவித்திருக்கிறது.

ஆனால் பவுடர் ரிவர் பேசினிலேயே குடிதண்ணீர் கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது; நிலக்கரி படுகையை ஒட்டியுள்ள ஆர்ட்டீசியன் நிரூற்றுகள் மறைந்து போய்விட்டன; நீரோட்டம் 200 அடி அளவுக்கு கீழே இறங்கிவிட்டது, நீரோட்டம் மாசடைந்துவிட்டது மேலும் நிலக்கரி படுகை மீத்தேன் வாயுவை வெளியேற்றுவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனப் பொருட்களில் சில நச்சுத் தன்மை உடையதாகவும், தண்ணீரில் கரையக் கூடியதாகவும், கதிரியக்கம் கொண்டதாகவும் உள்ளன என்றெல்லாம் ஆய்வறிக்கைகள் கண்டறிந்ததாக முதல்வர் விளக்குகிறார்.

ஏற்கனவே பருவநிலை மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் கடல் நீர் உட்புக வாய்ப்புள்ள சூழ்நிலையில், தமிழகத்தின் நெற் களஞ்சியமான காவேரி டெல்டா பகுதி நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் சிறிதளவு பாதிப்பு ஏற்படும் என்றாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளிக்காது. எனவே, இந்தத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்கிறார் முதல்வர்.

எனவே, இது குறித்து விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளவென வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்படும், அக்குழுவில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைச் சேர்ந்த வல்லுனர்கள் மற்றும் பொதுப்பணித் துறை, வேளாண்மைத் துறை, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த அலுவலர்கள் இடம் பெறுவர். அக்குழு மூன்று மாத காலத்தில் தனது அறிக்கையை அரசிற்கு அளிக்கவேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

அக்குழு தனது அறிக்கையை அளித்து, அதன் அடிப்படையில் அரசு ஒரு முடிவு எடுக்கும் வரை கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம் எந்தப் பணியையும் மேற்கொள்ள அனுமதிக்கப்படாது என முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.