உதயமாகிறது தெலங்கானா

தெலங்கானா குறித்த யுபிஏ கூட்டம்
Image caption தெலங்கானா குறித்த யுபிஏ கூட்டம்

இந்தியாவின் 29வது மாநிலமாக தெலங்கானாவை உருவாக்க மத்தியில் ஆளும் கூட்டணி முடிவு செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்குட்பட்டிருந்த பகுதிகள் தற்போதும் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கிறது. தமக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரி இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கூட்டுத் தலைநகர்

ஆந்திராவின் பிற பகுதிகளில் எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, பல ஆண்டுகளாக இது தொடர்பில் எவ்வித முடிவையும் எடுக்காமல் மத்திய அரசு காலம் கடத்தி வந்தது. அதே நேரம் ஹைதராபாத் தெலங்கானா மற்றும் ஆந்திராவின் தலைநகராக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆந்திரா மாநிலம் தனக்கென புதிய தலைநகரை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி உட்பட பல தலைவர்கள் மாநிலப் பிரிவினையை எதிர்த்துள்ளனர். பிற ஆந்திரத் தலைவர்களும் இதை எதிர்த்துள்ளனர்.

இந்த முடிவு கடினமானது என்றும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட்ட பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மாநிலத்தில் பரப்பளவு 1 லட்சத்து 15 ஆயிரம் சதுர கிலோ மீட்டராகவும், இதன் மக்கள் தொகை மூன்றரை கோடியாகவும் இருக்கும்.

ஆனால் இதற்கு முன்பு கூட மத்திய அரசு தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவதாக முன்பு கூட கூறியிருந்தது. ஆனால் ஆந்திராவில் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக மத்திய அரசு பின் வாங்கியது. இந்த முடிவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். எனவே புதிய மாநிலம் வருவதற்கு ஆறு மாத காலம்வரை ஆகும்.

இந்தியாவில் மொழி அடிப்படையில்முதலில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. பிறகு பழங்குடியினர் இருக்கும் சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்றவை தனி மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. வரும் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் இந்த விடயத்தில் தற்போது முடிவு எடுத்துள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தெலங்கானாவுக்கு ஒப்புதல் கிடைத்ததையொட்டி, நாட்டின் பிற இடங்களில் இருந்து எழும் தனி மாநிலக் கோரிக்கைகள் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

" நீண்டகாலக் கோரிக்கைக்கு முடிவு, தேர்தலை வைத்து அல்ல"

Image caption "தேர்தல் வருகிறதோ இல்லையோ, தெலங்கானா குறித்த முடிவு எடுக்கப்படுவது அவசியம்" -மணிசங்கர் ஐயர்

வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே காங்கிரஸ் கூட்டணி இந்த மாநிலப்பிரிவினை முடிவை எடுத்திருக்கிறது என்று எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த காங்கிரசின் முன்னாள் அமைச்சர் மணி சங்கர் ஐயர், இது நீண்ட காலமாக தெலங்கானா பிரதேச மக்கள் முன்வைத்து வரும் கோரிக்கை , தேர்தலுக்காக எடுக்கப்பட்ட முடிவல்ல என்றார். மேலும், ஜனநாயக அரசியலில், தேர்தல் போன்ற விஷயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டால் அதில் தவறு ஏதுமில்லை என்றும் அவர் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

2004ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி இணைந்ததிலிருந்தே இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், ஆனால் இந்த விஷயத்தில் ஆந்திராவின் மூன்று முக்கிய பிரதேசங்களான, ராயலசீமா, தெலங்கானா மற்றும் கடற்கரையோர ஆந்திரப் பகுதிகள் ஆகியவைகளில் வெவ்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. எல்லாத்தரப்பினரையும் இதில் திருப்திப்படுத்த முடியாது என்றார் அவர். ஆனால் தெலங்கானா பகுதி மக்கள் ஆந்திராவிலிருந்து பிரிவதையே விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை என்றார் மணிசங்கர ஐயர்.

ஆனால் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், பெரிதாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை எனவே இது போல ஒரு பெரிய முடிவை எடுக்கும் முன்னர் மற்றுமொரு மாநில மறுசீரமைப்புக் கமிஷன் ஒன்றை உருவாக்கி அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவேண்டும் என்ற வாதம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 1956ல் நடந்த மொழி வாரி மாநிலப் பிரிவுக்குப் பின்னர் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஜனநாயகத்தில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம், தெலங்கானா பிரச்சினை சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் பிரச்சினை, மக்களுக்கு இதில் ஒரு முடிவு ஏற்படவேண்டும் என்ற எண்ணம் வலுத்து வரும் இந்த நேரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படவேண்டும் என்றார் அவர்.