காஷ்மீர் சம்பவம் குறித்த மாறுபட்ட தகவல்களால் சர்ச்சை

  • 7 ஆகஸ்ட் 2013
பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி
Image caption பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி

செவ்வாய்க்கிழமையன்று 5 இந்தியப் படையினர் கொல்லப்பட்டது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி நாடாளுமன்றத்தில் அளித்த அறிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனால் அவை நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டன.

ஐம்மூ காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டருகே நடந்த சம்பவம் தொடர்பில் இந்திய இராணுவமும் , பாதுகாப்பு அமைச்சரும் மாறுபட்ட தகவல்களை அளித்துள்ளது நாடாளுமன்றத்தை முடங்கச் செய்துள்ளது.

எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் படையினர் – ஐந்து இந்திய வீரர்களை கொன்றுவிட்டதாக இந்திய இராணுவம் கூறியிருந்தது. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோணி, எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் இராணுவ உடையணிந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பாதுகாப்பு அமைச்சரின் பேச்சு, பாகிஸ்தானுக்கு நற்சான்றளிக்கும் முயற்சி என்றும் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கோரினார்.

அதே நேரம் தன்னிடம் இருந்த தகவல்களைத்தான் நாடாளுமன்றத்தில் பகிர்ந்து கொண்டதாகவும், ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள இராணுவத் தளபதி பிக்ரம் சிங் திரும்பி வந்த பிறகு, தனக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்தால் அதை அவை உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பேன் என்றும் ஏ கே அந்தோணி கூறியுள்ளார்.

பிற காங்கிரஸ் அமைச்சர்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐ நா பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இந்த சம்வம் நடந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் பாதுகாப்பு அமைச்சர் தனது வார்த்தைகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று பாதுகாப்பு ஆய்வு அமைப்பான ஐ டி எஸ் ஏ வைச் சேர்ந்த ஆய்வாளர் கல்யாணராமன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவரின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று பாகிஸ்தான் ஏற்கனவே தெரிவித்துள்ளது

இந்தச் செய்தி குறித்து மேலும்