இந்தியாவின் முதல் அணு- நீர்மூழ்கிக் கப்பலின் அணு உலை இயங்குகிறது

  • 10 ஆகஸ்ட் 2013
ஐஎன்எஸ் அரிஹாந்- வரைபடம்
Image caption ஐஎன்எஸ் அரிஹாந்

இந்தியாவில் கட்டப்பட்ட அணு சக்தியால் இயங்கக் கூடிய முதல் நீர்முழ்கிக் கப்பலான, ஐஎன்எஸ் அரிஹாந்தில் பொருத்தப்பட்டுள்ள அணு உலை இயங்க ஆரம்பித்துள்ளது. நேற்று வெள்ளிக் கிழமை இரவு இந்த அணு உலை இயக்கப்பட்டது.

இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்ப முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் முன்னேற்றம் இது என்று விஞ்ஞானிகளுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, ஐஎன்எஸ் அரிஹாந்த் கப்பலை வைபரீதியாக கடற்படையிடம் ஒப்படைத்தார்.

விசாகப்பட்டினத்தில் கட்டப்பட்ட கப்பலின் அணு உலை செயற்பட ஆரம்பிக்காததால், அந்த நீர்முழ்கிக் கப்பல் மட்டுப்பட்ட அளவில் துறைமுகத்திற்குள் மட்டுமே சோதனை முறையில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அணு உலை இயங்குவதால் இந்தக் கப்பலை இந்தியா ஆழ் கடலில் கொண்டு செல்ல முடியும். இதற்கான வேலைகள் விரைவில் துவங்கும்

ரஷ்யாவிடமிருந்து ஒரு அணு நீர்முழ்கிக் கப்பலை குத்தகைக்கு எடுத்து இந்தியா இயக்கி வருகிறது. ஐஎன்எஸ் சக்ரா என்ற பெயரிடப்பட்ட இந்த நீர்முழ்கிக் கப்பல் கடந்த ஆண்டு ஜனவரி முதல் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைப் பிரிவின் கீழ் இயங்கி வருகிறது.

டீசல் மூலம் இயங்கும் நீர்முழ்கிக் கப்பல்களால், நீண்ட நாட்கள் தண்ணீருக்கு கீழ் இருக்க முடியாது. ஆனால் அணு சக்தியால் இயங்கும் நீர்முழ்கிக் கப்பல்களால் மாதக் கணக்கில் நீருக்குள் பயணம் செய்யமுடியும்.

அணு ஆயுதங்கள்

Image caption ரஷ்யாவில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஐ என் எஸ் சக்ரா

அணு ஆயுதங்களை நீருக்கு அடியே தாங்கிச் சென்று செலுத்தக் கூடிய முக்கிய கப்பலாக ஐஎன்எஸ் அரிஹாந்த் இருக்கும். இதில் இருந்து செலுத்தப்படக் கூடிய நடுத்தர தூர ஏவுகணையை உருவாக்கும பணி முக்கிய கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தரையில் இருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை, முன்கூட்டிய செயற்கைக் கோள் மூலம் கண்டுபிடித்து அழிப்பது சாத்தியம். ஆனால் நீர்முழ்கிக் கப்பல்களை கண்காணித்து தாக்குதல் நடத்துவது ஒப்பீட்டளவில் கடினமானது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் மட்டுமே இத்தகைய அணுசக்தி நீர்முழ்கி கப்பல்களை இயக்குகின்றன. இந்தியா ஐஎன்எஸ் அரிஹாந்தைப் போலவே மேலும் 3 அணு நீர்முழ்கிக் கப்பல்களை கட்டிவருவதாக கூறப்படுகிறது.

கடல் பலம்

Image caption பயிற்சியில் ஈடுபடும் இந்தியக் கடற்படைக் கப்பல்கள்

சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா கடந்தபல ஆண்டுகளாக தனது கடற்படையின் திறனைக் கூட்டி வருகிறது. வரும் திங்கட் கிழமையன்று கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் உள்நாட்டில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பலான, ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற கப்பலின் இரண்டாம் கட்டப் பணிகள் வைபவ ரீதியாக பாதுகாப்பு அமைச்சரால் துவக்கி வைக்கப்படவுள்ளது.

சுமார் 40 ஆயிரம் டன்கள் எடை கொண்ட இந்தக் கப்பல் அடுத்த கட்ட கட்டுமானப் பணிகளுக்காக கடலில் செலுத்தப்படும். 2018 ஆம் ஆண்டு அளவில் அந்தக் கப்பலின் பணிகள் முழுமையடைந்து அது கடற்படையில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், பிரான்சின் உதவியோடு மும்பையில் கட்டப்படும் 6 டீசல் நீர்முழ்கிக் கப்பல்களை கடற்படையில் சேர்ப்பதில் பெரும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து தயாரிக்கப்படும் நீண்ட தூரம் சென்று விண்ணில் பறக்கும் ஏவுகணைகளையும், விமானங்களையும் தாக்கும் ஏவுகணைத் திட்டமும் தாமதமடைந்துள்ளது.