இந்தியாவில் முக்கிய பயங்கரவாத சந்தேகநபர் கைது

அப்துல் கரீம் டுண்டா
Image caption அப்துல் கரீம் டுண்டா ( படம் உதவி சி பி ஐ)

இந்தியாவில் பல குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் முக்கிய சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்திருப்பதாக இந்தியப் பொலிசார் கூறுகின்றனர்.

பாகிஸ்தானிலிருந்து இயங்கும் லஷ்கர் இ தொய்பா என்ற தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் அப்துல் கரீம் துண்டா பிடிபட்டுள்ளதாக என தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சுமார் 70 வயதாகும் அப்துல் கரீம் துண்டா இந்தியாவில் பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாகவும் தேடப்பட்டுவருபவர்.

2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தானிடம் கையளித்திருந்த மிகவும் தேடப்படுவோர் 20 பேர் அடங்கிய பட்டியலில் இவரது பெயரும் இருந்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று இந்தியா நேபாள எல்லைப் பகுதியில் இவர் கைதுசெய்யப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதாகவும், பாகிஸ்தானிய கடவுச்சீட்டு ஒன்று இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தில்லி காவல்துறையின் உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

1993ல் மும்பையில் நடந்த 250 பேரை பலிகொண்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் இவரை விசாரிக்க விரும்புவதாக மும்பை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உத்திரப் பிரதேசவாசியாக இருந்த அப்துல் கரீம் தொண்ணூறுகளின் மையப்பகுதியில் இந்தியாவை விட்டு தப்பியோடியிருந்தார் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பொன்றை இவர் தோற்றுவித்தவர் என்றும், தில்லி, சோனிபட், லூதியானா போன்ற இடங்களில் 1996க்கும் 1998க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த குண்டுவெடிப்புகளில் இவர் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குண்டுகளைச் செய்வதில் இவர் நிபுணரென்று பொலிசார் குற்றம்சாட்டுகின்றனர். அப்படி குண்டு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தொன்றில் இவர் தனது ஒரு முன்னங்கையை இழந்ததாலேயே துண்டா என்று இவர் அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அப்துல் கரீம் துண்டாவை தில்லி பொலிசார் மூன்று நாள் விசாரணைக் காவலில் வைக்க நீதிபதி அனுமதித்துள்ளார்.