ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் மதச்சின்னமல்ல"

  • 19 செப்டம்பர் 2013
Image caption ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம்

தமிழ்நாட்டின் அரசு முத்திரையில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தை மாற்ற வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவில் 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள் சென்னை மாகாணமாக உருப்பெற்றன. அதுநாள்வரை சென்னை ராஜதானியில் இருந்த சிலபகுதிகள் புதிதாக உருவான ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகத்துடன் இணைக்கப்பட்டன.

அந்த காலகட்டத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்த கு காமராஜர் தலைமையிலான அரசு, அரசாங்க சின்னமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்தைத் தேர்ந்தெடுத்தனர். இந்த சின்னமே இன்று வரை தமிழக அரசின் சின்னமாக தொடர்ந்தும் இருக்கிறது.

வழக்கு

இந்திய அரசியல் சாசனம் எந்த ஒரு மதத்துக்கும் சிறப்பு சலுகைகளை வழங்கவில்லை. அரசியல் சட்டத்தின் ஆரம்பப் பிரகடனத்திலேயே இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று கூறப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடுத்திருந்தார். இது குறித்து பதில் அளித்த மாநில அரசு, பெண்மையைப் போற்றும் விதத்தில்தான் ஆண்டாளுடன் தொடர்புடைய ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் அரசின் முத்திரையில் இடம்பெற்றுள்ளதாகவும், கோயில்கள் கலாச்சார சின்னமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இதை நீதிமன்றம் ஏற்ற இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

வரலாற்றுப் பின்னணி

Image caption ஆண்டாள்

மொழி வாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது முதல்வராக இருந்த கு காமராஜர் மத நம்பிக்கையாளராக யாராலும் பார்க்கப்படவில்லை என்றும் அந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் முக்கிய சக்தியாக இருந்த பெரியார், காமராஜரை முழுமையாக ஆதரித்தார் என்றும் ஆய்வாளர் எஸ் வி ராஜதுரை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

வைணவ பக்தர்களால் "சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என்று அழைக்கப்படும் ஆண்டாள் இந்தக் கோயிலில் வளர்ந்ததாக நம்பப்படுகிறது. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் அங்கமாக இருக்கின்றன. ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டுப் பாசுரம் வைணவக் கோயில்களில் இன்றுவரை தினந்தோறும் ஒலிக்கும் ஒரு பாடலாக திகழ்கிறது.

"ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலுடன் தொடர்புடைய ஆண்டாளும், ராமனுஜரும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள். அந்த கால சூழலிலேயே சூத்திரர்கள் வேதம் படிக்கக் கூடாது என்று பார்ப்பனர்கள் கூறியதை புறந்தள்ளி, கோயில் கோபுரத்தில் ஏறி எல்லோருக்கும் மூல மந்திரத்தை ராமானுஜர் சொல்லிக் கொடுத்தார் என்பதாலும் அக் கோயிலுடனும் அதன் கோபுரத்துடனும் யாரும் பிற்போக்குத் தன்மையை பொறுத்திப் பார்க்கவில்லை", என்றும் ராஜதுரை கருதுகிறார்.

இப்போதைய சூழலில் இதுபோன்ற விடயங்களுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படலாம் என்றாலும், இந்த சின்னங்களை மாற்றத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.