இந்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளக் குழு

ஊதியக் குழுவின் பரிந்துறைகள் இராணுவத்தினர் பயனடைவர்
Image caption ஊதியக் குழுவின் பரிந்துறைகள் இராணுவத்தினர் பயனடைவர்

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியங்களை நிர்ணயம் செய்ய ஏழாவது சம்பளக் குழுவை மத்திய அரசு அமைப்பதாக அறிவித்துள்ளது.

ஊழியர்களின், சம்பளம் மற்றும் படிகள் குறித்து இது ஆராயும். இந்தக் குழுவின் பரிந்துறைகள் வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ரயில்வே, தபால், இராணுவம் உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் மத்திய அரசுப் பணியாளர்களின் ஊதியத்தை நிர்ணம் செய்ய 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த ஊதியக் குழுக்களின் பரிந்துறையால் 50 லட்சம் மத்திய அரசுப் பணியாளர்களும், 30 லட்சம் ஒய்வூதியம் பெறுபவர்களும் பலனடைவார்கள். பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு இணையான சம்பளங்களை தமது ஊழியர்களுக்கு வழங்குவதால், இந்த பரிந்துறைகளால் நாட்டில் உள்ள மேலும் பல லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என்று சொல்ல்லாம்.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாநிலத் தேர்தல்கள், இந்தியாவின் நாடாளுமன்றத்தேர்தலும் அடுத்தடுத்து நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வந்துள்ளதால் இந்த அறிவிப்புக்குப் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இனி அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.