அரசியலில் குற்றவாளிகள்: அரசு நடவடிக்கைக்கு ராஹுல் காந்தி விமர்சனம்

ராஹுல் காந்தி

குற்றவாளிகள் அரசியல் பொறுப்புகள் வகிப்பதை முழுமையாகத் தடுப்பதற்கு ஆதரவாக இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஹுல் காந்தி கருத்து வெளியிட்டுள்ளார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தாலும், அவர்கள் மேல்முறையீடு செய்ததை மட்டும் வைத்து பதவியில் நீடிக்க அனுமதிக்க்க் கூடாது, அவர்கள் உடனடியாகப் பதவியிழக்கச் செய்யவேண்டும் என ஜூலை மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயலற்றுப் போகும் விதத்தில் மத்திய அரசு தயாரித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கும் அவசரச் சட்டத்துக்கு எதிராக அவர் கடுமையான கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராஹுல் காந்தி, இந்த அவசரச் சட்டம் ஒரு முட்டாள்தனமானது என்று சாடினார்.

பிரதமர் மன்மோஹன் சிங் ஐநா மன்ற பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்ற அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் ராஹுல் காந்தியின் இந்தக் கருத்துக்கள் வந்திருக்கின்றன.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் இந்த அவசர சட்ட முயற்சி குறித்த கருத்து வேறுபாடுகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்துகொண்டிருந்தன.

அவசரச் சட்ட முயற்சிக்கெதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங். அமைச்சர் மிலந் தியோரா போன்றார் கருத்துத் தெரிவித்திருந்தனர்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த அவசர சட்டத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிமினல் பின்னணியைக் கொண்டவர்கள் கட்சி வித்தியாசமின்றி தேர்தலில் நின்று வெற்றிபெருவது இந்தியாவில் பல காலமாக நடந்து வருகிறது.

நடப்பு நாடாளுமன்ற மக்களவையில் இருக்கும் 30 சதவீத உறுப்பினர்கள் மீதும் மேலவையில் இருக்கும் 17 சதவீத உறுப்பினர்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன.

கொலை, ஊழல், பாலியல் வழக்குகள் போன்ற பாரதூர வழக்குகளை சந்திக்கும் அரசியல்வாதிகளும் இதில் அடக்கம்.

ஏற்கனவே நடப்பில் இருந்து மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி எந்த ஒரு குற்றத்துக்காகவும் தண்டனை பெற்றவர்கள் 6 ஆண்டுகள் வரை தேர்தலில் நிற்கத் தடையுள்ளது.