கர்நாடகாவில் விதவைகள் அர்ச்சகர்களாக நியமனம்

அர்ச்சகர்களாகப் பொறுப்பேற்றுள்ள இந்திரா மற்றும் லக்ஷ்மி
Image caption அர்ச்சகர்களாகப் பொறுப்பேற்றுள்ள இந்திரா மற்றும் லக்ஷ்மி

கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள பெரிய கோயில் ஒன்றில் இரு விதவைப் பெண்கள் அர்ச்சகர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

லக்ஷ்மி மற்றும் இந்திரா ஆகிய இரு விதவைப் பெண்களும் நவராத்திரியின் துவக்க தினமான நேற்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மங்களூரு குத்ரோலி கோகர்நாதேஸ்வரா கோவிலில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கோயில் கேரளாவின் பிரபலமான ஆன்மீக சீர்திருத்தவாதியான நாராயண குருவால் அமைக்கப்பட்ட கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், பொதுவாக தென்னிந்தியாவில் ஆகம விதிகளின்படி நடத்தப்படுகின்ற இந்துக் கோயில்களில் பெண்களுக்கு பூசை செய்ய அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில பெண்கள் சமயப் பிரசாரகர்களாகவும், வேதங்களின் உட்பொருளை விவாதிக்கும் திறனுடையவர்களாகவும் இருந்திருந்தாலும் பொதுவாக பெண்கள் வேதம் படிக்க பல நூற்றாண்டு இந்து மத அமைப்புக்கள் அனுமதிக்கவில்லை. அதிலும் குறிப்பாக விதவைப் பெண்கள் மிக மோசமாகவே நடத்தப்பட்டு வந்துள்ளனர். இப்போது கூட கணவனை இழந்த பெண்கள் சில சமயச் சடங்களுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.

இருந்தும் விதவைப் பெண்கள் அர்ச்சகர்களாக்கப்பட்டுள்ளதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக இந்தக் கோயிலின் நிர்வாகியாக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜனார்தன் பூஜாரி கூறியுள்ளார். பெண்கள் அர்ச்சகரானது வரலாற்றில் இடம்பெறக் கூடிய நடவடிக்கை என்று கூறிய அவர் வரும்காலத்தில் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேலும் பல பெண்களை பணியமர்த்துமாறு தான் அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்தப் இரு பெண்களும் பொறுப்பேற்கும் நிகழ்வில் ஜாதி மத வேறுபாடுகளைக் கடந்த பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இரு பெண்களுக்கும் கோயில் வழிபாட்டு முறை குறித்து 4 மாத காலப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கப்படும்.

நாராயண குரு

கேரளாவில் பல சமயம்சார்ந்த சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட நாராயணகுருவால் அமைக்கப்பட்ட இந்த கோயிலில்தான் தற்போது இந்த சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஈழவ சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. அவரின் காலத்தின் ஈழவர்கள் தீண்டத் தகாதோராக – கோயிலில் நுழையத் தகுதியற்றவர்களாக- பார்க்கப்பட்டனர். இத்தகைய ஜாதிய முறையை எதிர்க்கும் வண்ணம் நாராயண குரு தனியாக பல கோயில்களைக் கட்டினார். அங்கு ஈழவர்களை அர்ச்சகராக்கினார். இது தீண்டத்தகாதோரின் சிவன் கோயில் என்று அவற்றை விளம்பரப்படுத்தினார்.

கேரளாவில் நம்பூத்திரி பிராமணர்களால் பல நூற்றாண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வந்த மிகக் கடுமையான ஜாதிய தீண்டாமை முறை வேகமாக உடைந்து போக நாராயண குருவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்பது இன்று பரவலாக ஒத்துக் கொள்ளப்படுகிறது.