பாய்லின் புயலில் 7 பேர் பலி, மீட்புப் பணிகள் தொடர்கின்றன

Image caption பாய்லின் புயல் வீரியம் குறைந்து வடமேற்காக நகர்கிறது

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை ஊடறுத்து தாக்கிய பாய்லின் புயலின் பின்னரான அவசர நிவாரண நடவடிக்கைகளில் இந்திய இடர் மேலாண்மை குழுக்கள் ஈடுபட்டுள்ளன.

ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் புயல் தாக்கிய பகுதிகளுக்குச் சென்றுள்ள மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலும் மரங்கள் முறிந்து வீழ்ந்தே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள லட்சக் கணக்கான மக்களுக்கான நிவாரண உணவு விநியோக பணிகள் நடந்துவருகின்றன.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்ட முன்கூட்டிய மக்கள் அப்புறப்படுத்தல் நடவடிக்கைகளே ஆட்சேதங்களை பெருமளவில் குறைத்துள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாதிக்கப்பட்ட முக்கிய பல இடங்களுக்கான மின்சார மற்றும் தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் முழுமையான சேதவிபரங்கள் இன்னும் தெரியவரவில்லை.

நேற்று சனிக்கிழமை இரவில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பாய்லின் புயல்காற்று இன்று வீரியம் குறைந்து வடமேற்காக நகர்கின்றது.

1999-ம் ஆண்டில் ஒடிசாவைத் தாக்கிய சூறாவளியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.