தூத்துக்குடி அருகே சிறைப் பிடிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் மீது வழக்கு

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி அருகே சிறைப் பிடிக்கப்பட்ட கப்பல் ஊழியர்கள் 35 பேர் மீது நான்கு வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அக்கப்பலில் மாலுமிகள் பத்து பேரும் கடற்கொள்ளையரை எதிர்கொள்ளும் வீரர்கள் 25 பேரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு ஆயுதங்களுடன் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த சீ மேன் கார்ட் எனும் அக்கப்பல் மேற்காப்பிரிக்க நாடான சியாரா லியோனில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது,

அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானதெனத் தெரியவந்திருக்கிறது.

Image caption அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு இந்தக் கப்பல் சொந்தமானது என்று கூறப்படுகிறது

சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அச்சிறிய கப்பல் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்தியப் பகுதியில் ஒதுங்கியிருக்கலாம் என்றுதான் முதலில் கூறப்பட்டு வந்தது.

ஆனால் இப்போதோ இந்திய கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்தது, முறையான ஆவணங்களின்றி ஆயுதங்கள் வைத்திருந்தது, பாதுகாப்புப் பணிக்குத் தேவைபடுவதை விடவும் அதிகமான அளவில் தோட்டாக்கள் வைத்திருந்தது, இந்திய சட்டங்களுக்குப் புறம்பாக அதிவேகப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசலை சிலரிடமிருந்து வாங்கியது, உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வழக்குக்களை மாநில அரசின் கடலோரக் காவற்படை பிரிவு பதிவு செய்திருக்கிறது.

தவிரவும், நேற்று ஞாயிறுவரை ஆவணங்கள் எல்லாம் முறையாக இருப்பதாகவே நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறிவந்தன. ஆனால் இப்போது சில ஆவணங்கள் இல்லை என்கின்றனர்.

பல்வேறு அரசுத்துறைகளும் இப்பிரச்சினை குறித்து விசாரித்து வருவதன் காரணமாக குழப்பங்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன என்றும் நோக்கர்கள் கருதுகின்றனர்.

வழக்குப் பதிவின் பின்னணியில் கப்பல் ஊழியர்கள் கைதுசெய்யப்படுவார்களா அல்லது கப்பல் விடுவிக்கப்படுமா என்பது திங்கள் மாலை தெரியவரலாம்.