பிர்லா மீது குற்றச்சாட்டு

  • 15 அக்டோபர் 2013

இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு வழங்கியது தொடர்பாக நடைபெறும் வழக்கில் சிபிஐ தனது 14வது குற்றப்பத்திரிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளது.

இதில் புதியதாக தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா உட்பட நால்கோ, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராகவும் நிலக்கரித்துறை முன்னால் செயலர் பி.சி.பாரக்கை சேர்த்தும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தில்லி, கொல்கத்தா, மும்பை உட்பட இன்னும் சில நகரங்களில் இவர்களது வீடுகள் மற்றும் அலுவலங்கங்களில் சிபிஐ சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த 2005-ம் ஆண்டு ஒதுக்கீடு பெற்றுள்ள தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா மீது ஏமாற்றுதல், சதி, தவறான தகவல் அளித்தல் உட்பட இன்னும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அவர் விரைவில் சிபிஐ-யால் நேரில் விசாரிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஹிண்டால்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தனது நிறுவனம் பெற்றுள்ள ஒதுக்கீடு முழுவதும் சட்டபூர்வமானது என்றும், எந்த விதி மீறல்களும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒதுக்கீடு பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான நிறுவனம் என்ற காரணத்திற்காகவே நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா விசாரிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாயமாகியுள்ளதால் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்களை சமாளிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிஐ இதுவரை மூன்று கட்ட விசாரணைகளை முடித்துள்ளது.

இதற்கு முன்பாகவே இதைப் போல் கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் எம்பியும், தொழிலதிபருமான நவீன் ஜிந்தால் மீதும் குற்றப்பத்திரிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிபிஐ தனது 12வது முதல் தகவல் அறிக்கையில் தவறான தகவல் அளித்தல் தொடர்பாக நவீன் ஜிந்தால் மீது குற்றம் சாற்றியுள்ளது.

இதைத் தொடர்ந்தும் பிஜேபி, சிபிஐ, சிபிம் போன்ற எதிர்கட்சிகள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முழுப்பொறுப்பு ஏற்று இராஜினாமா செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.