பிரிட்டிஷ் இளவரசர் இந்தியா செல்கிறார்

கொழும்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் நாடுகள் மாநாட்டில், பிரிட்டனின் மகாராணியாரின் பிரதிநிதியாக இளவரசர் சார்லஸ் கலந்துகொள்கிறார்.

இலங்கைக்கு செல்லும் முன்னர் 9 நாட்கள் இளவரசரும் அவரது துணைவியாரான கார்ன்வல் சீமாட்டியும் இந்தியாவுக்கு செல்லவுள்ளனர்.

இது அவர்கள் இருவரும் சேர்ந்து இந்தியாவுக்குச் செல்லும் மூன்றாவது பயணம் ஆகும். இதற்கு முன்னர் 2006ஆம் ஆண்டிலும், 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் நாடுகள் மாநாட்டுக்காகவும் இந்தியாவிற்கு அவர்கள் விஜயம் செய்திருந்தனர். எனினும் நீண்ட பயணமாக 9 நாட்கள் இந்தியாவிற்கு பயணிப்பது இதுவே முதல் முறை.

அவர்களுடைய அடுத்த மாதப் பயணம் பிரிட்டன் - இந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் விதமாக அமையும். அதிலும் இயற்கை வளங்களை பாதுகாத்தல், கல்வி , வர்த்தகத் தொடர்புகள் மற்றும் பெண்களின் முன்னேற்றம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று டில்லிகான பிரிட்டிஷ் தூதரகம் அறிவித்துள்ளது.

புது தில்லி , மும்பை , பூனே மற்றும் கொச்சி செல்லும் இவர்கள், அங்குள்ள முக்கிய அரசியல், வர்த்தக மற்றும் கலாச்சார தலைவர்களை சந்திக்கவுள்ளார்கள்.

குறிப்பாக இளவரசர் கேரளாவில் உள்ள யானைகள் சரணாலயத்தை காணவுள்ளார். சீமாட்டி அவர்கள் டெஹ்ரா தூனில் உள்ள தூன் தனியார் பள்ளிகூடத்திற்கு பயணம் செய்கிறார். இருவரும் சேர்ந்து இந்திய இராணுவக் கழகத்தை பார்வையிடுகின்றனர். மேலும் மும்பையில் பாலிவுட் நட்சத்திர விருந்திலும் அவர்கள் கலந்து கொள்வார்கள்.

இளவரசரும் சீமாட்டியும் இலங்கையில் காமன்வெல்த் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்பார்கள்.