தனியார் வானொலிகளில் செய்திகளுக்குத் தடை ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி

இந்தியாவில் தனியார் வானொலிகளுக்கும் செய்திகள் வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த இந்திய உச்சநீதிமன்றம், தனியார் தொலைக்காட்சிகளுக்கு அனுமதியளிக்கும் அரசாங்கம் தனியார் வானொலிகளுக்கு மட்டும் செய்திகள் வழங்க அனுமதி மறுப்பது ஏன் என்று இந்தியாவின் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பொது நலன் மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு நீதிமன்றம், தனியார் தொலைகாட்சி, செய்தித்தாள், சஞ்சிகைகள் உட்பட ஏனைய தனியார் ஊடகங்களுக்கெல்லாம் செய்திகள் வழங்க அனுமதி அளித்துள்ளபோது போதும், மத்திய அரசு பண்பலை வானொலிகளுக்கும், சமுதாய வானொலிகளுக்கும் மட்டும் செய்திகள் வழங்க அனுமதி வழங்காமல் இருப்பது எதனால் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தனியார் தொலைகாட்சிகள் செய்திகள் வழங்கி வரும் நிலையில் பொதுமக்களை எளிதில் சென்றடையும் ஊடகமான வானொலியில் செய்திகள் வழங்குவதில் தவறில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு தனது பதிலை மனுவாக தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கைபேசியில் கூட செய்திகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வானொலிகளுக்கு மட்டும் செய்திகள் வழங்க இந்தியாவில் அனுமதி இல்லாமல் இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை என்று வாதிடும் சமுக ஆர்வலர்கள், வேகமாக வளர்ந்து வரும் ஊடகமான வானொலியில் செய்திகள் வழங்குவது ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று வாதாடுகிறார்கள்.

ஆனால் இதை ஏற்கமறுக்கும் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், வானொலியில் செய்திகள் அளிக்கும் உரிமையை தனியாருக்கு அளித்தால், மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருப்பதாக மத்திய அரசு கருதும் பல்வேறு பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குழுக்களின் பிரச்சாரம் தனியார் வானொலிகளில் அதிகரிக்கும் என்றும் அதை கண்காணித்து கட்டுப்படுத்துவது மத்திய அரசிற்கு மிகப்பெரும் தலைவலியாக மாறும் என்றும் வாதாடுகிறது.

தனியார் வானொலிகளுக்கு செய்திகள் வழங்க அனுமதியளிப்பது, இந்தியாவின் இறையாண்மைக்கு தலைவலியாக மாறும் என்கிற இந்திய அரசின் நிலைப்பாடு கடந்த காலத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானாலும், முதல் முறையாக இந்த விவகாரத்தில் இந்திய உச்சநீதிமன்றம் தலையிட்டிருப்பது முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.