தமிழ்நாட்டில் பிடிபட்ட கப்பலின் தலைமை பொறியாளர் தற்கொலைக்கு முயற்சி

கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி அருகே சிறைப்பிடிக்கப்பட்ட சீ மேன் கார்ட் கப்பலின் தலைமைப் பொறியாளரும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவருமான சிடரென்கோ வாலேரி மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கப்பலின் கேப்டன் உட்பட கைது செய்யப்பட்ட 35 பேர் தற்போது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில், வாலேரி தான் அணிந்திருந்த சட்டையை கழுத்தில் சுற்றி இறுக்கிக் கொள்ள முயற்சித்ததைக் கண்ட சிறைக் காவலர்கள் அவரிடமிருந்து சட்டையை பறித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கப்பல் கேப்டனையும், பொறியாளரையும் கைது செய்ய காவல்துறையினர் சென்றபோதும், வாலேரி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று அப்போதும் மீட்கப்பட்டார்.

அவர் சிறையில் அமைதியற்று காணப்படுவதாகவும் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இதனிடையே, சிறையில் உள்ள கப்பல் ஊழியர்கள் 35 பேரில் பிரிட்டனை சேர்ந்த அறுவரை சென்னை பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சிலர் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

பல்வேறு ஆயுதங்களுடன் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த சீ மேன் கார்ட் மேற்காப்பிரிக்க நாடான சியாரா லியோனில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த கப்பல் அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது.

இந்திய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட அக்கப்பல் ஊழியர்கள் மீது இந்திய கடற்பகுதியில் அனுமதியின்றி நுழைந்தது, முறையான ஆவணங்களின்றி ஆயுதங்கள் வைத்திருந்தது, பாதுகாப்புப் பணிக்குத் தேவைபடுவதை விடவும் அதிகமான அளவில் தோட்டாக்கள் வைத்திருந்தது, இந்திய சட்டங்களுக்குப் புறம்பாக அதிவேகப் பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசலை சிலரிடமிருந்து வாங்கியது, உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பான வழக்குக்களை மாநில அரசின் கடலோரக் காவற்படை பிரிவு இவர்கள் மீது பதிவு செய்திருக்கிறது.

இவர்கள் அனைவரும் தற்போது 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.