எம்.பி.க்களான லாலு பிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா பதவி நீக்கம்

  • 22 அக்டோபர் 2013
Image caption லாலு பிரசாத் யாதவ்க்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகால சிறைத் தண்டனை அளித்தது

இந்தியாவில், பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஜகதீஷ் ஷர்மா ஆகிய இரண்டு எம்.பிகளும் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்ததன் பிறகு, முதல் முறையாக நேற்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஷீத் மசூத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக லாலு பிரசாத் யாதவ், ஜகதீஷ் ஷர்மா ஆகியோர் இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1990–களில் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் முதலமைச்சராக பணிபுரிந்த காலத்தில், அவர் கால்நடைத் தீவன ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதன் பிறகு லாலு பிரசாத் பிகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சி எம்பி ஜெகதீஸ் ஷர்மா ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

பின்னர், லாலு பிரசாத் உள்ளிட்டவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அக்டோபர் மூன்றாம் தேதி அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.25 லட்சம் அபராதமும் விதித்தது .

ஜகதீஷ் ஷர்மாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ரஷீத் மசூத் மேல் முறையீடு

Image caption ரஷீத் மசூத் மேன்முறையீடு செய்கிறார்

இதற்கிடையே, மாநிலங்களவை உறுப்பினரான காங்கரஸின் ரஷீத் மசூத், எம்.பி.பி.எஸ் சீட்டு முறைகேட்டில் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு, 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று, பின்னர் எம்.பி. பதவியிலிருந்து நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அந்த தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹிம்லா கொஹ்லி, இது குறித்து நவம்பர் 13ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.