'2011- பரமக்குடி துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது': சம்பத் கமிஷன்

Image caption பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்

2011 ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாத சூழலில் நிகழ்ந்ததாக நீதிபதி சம்பத் கமிஷன் கூறியிருக்கிறது.

அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாளன்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலித் மக்கள் மீதான அரசு வன்முறை என்று சில தரப்பினரால் அது விமர்சிக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் அறிக்கை தமிழக சட்ட மன்றத்தில் இன்று செவ்வாய் தாக்கல் செய்யப்பட்டது.

சம்பவ தினத்தன்று, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சிறுவன் பழனிக்குமார், கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பரமக்குடியில் உள்ள ஆதிதிராவிடர் தலைவரான இமானுவேல் சேகரன் சமாதிக்கு செல்லும் வழியில் பச்சேரி கிராமத்துக்கு சென்று கொலையுண்ட சிறுவனுடைய இறப்புக்கு வருத்தம் தெரிவிப்பதாக இருந்தது.

ஆனால், அவரது வருகை மற்றும் பேச்சு, இரு பிரிவினரிடையே மோதலை அதிகரிக்கும் என்பதால் ஜான் பாண்டியனையும் அவரது ஆதரவாளர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். அதேநேரம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சமாதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஆத்திரமடைந்த ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் இறங்கினர். அவர்களுக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது அடையாறு துணைக் கமிஷனர் செந்தில் வேலனின் சட்டையை கலவரக்காரர்களில் ஒருவர் பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டார் என சம்பத் கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

'காவல்துறையின் செயல் மெச்சத்தக்கது'

காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினைக் கலைக்க முயன்றபோது போலீஸ் மீது கற்கள், செருப்புகள், மரக்கட்டைகள் வீசப்பட்டன. ஒரு கட்டத்தில் பெட்ரோல் குண்டுகளும் எறியப்பட்டன. பரமக்குடி பெண்கள்-போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர்.

தடியடி, கண்ணீர் புகை இவற்றுக்குப் பிறகும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் கமுதி வட்டாச்சியர் சிவகுமார் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.

எனவே வன்முறையை கட்டுப்படுத்தவும், வன்முறை பரவாமல் தடுக்கவும் அத்துப்பாக்கிச் சூடு முற்றிலும் அவசியம் என்று விசாரணை ஆணையம் கருதுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

'போலீசார் அளவற்ற பொறுமையை கடைபிடித்தனர். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் அப்பகுதியில் பேரழிவு ஏற்பட்டு இருக்கும். கலவரத்தில் இறங்கியவர்கள் எல்லை மீறி நடந்துகொண்டனர், அவர்களது செயல்கள் மன்னிக்கக்கூடியதே அல்ல.அத்தகையதொரு சூழலில் காவல்துறையினர் நடந்துகொண்ட மெச்சத்தக்க முறையை கமிஷன் பாராட்டுகிறது' என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ப அரசு வேலையும், இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சமும் வழங்க உத்தரவிட்டதன் மூலம் தமிழக அரசு அளவில்லா கருணை காட்டியுள்ளதாகவும் சம்பத் கமிஷன் பாராட்டியிருக்கிறது.