தெலங்கானா அமைச்சர்கள் குழு அரசியல் கட்சிகளைச் சந்திக்கிறது

தெலங்கானாவுக்கான போராட்டங்களின் போது பிடிக்கப்பட்ட படம்
Image caption தெலங்கானாவுக்கான போராட்டங்களின் போது பிடிக்கப்பட்ட படம்

தெலங்கானா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க இந்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, நவம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் 8 அரசியல் கட்சிகளை சந்தித்து தெலங்கானா குறித்து பேச உள்ளது.

காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசக் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தெலங்கானா ராஷ்டிரா சமிதி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி ஆகிய கட்சிகள் தனியாக அழைக்கப்பட்டு இந்த அதிகார்வபூரமான அமைச்சர்கள் குழுவை சந்தித்து நதி நீர் பங்கீடு, இயற்கை வளங்கள் பங்கீடு போன்ற விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவார்கள் என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அந்த 8 கட்சிகளுக்கும் தகவல் அனுப்பி அந்த கட்சிகளின் பதிலுக்காக காத்திருகிறது.

ஆந்திராவை பிரிக்க தெலுங்கு தேசக் கட்சியும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த இரண்டு கட்சிகளும் சுஷில் குமார் தலைமையிலான இந்தக் குழுவிற்கு பதில் அளிப்பது சந்தேகமே. இதற்கிடையில் ஏற்கனவே ஆந்திராவை பிரிப்பது குறித்து துறை வாரியாக விரிவான அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் குழுவிற்கு , பெரும்பாலுமான அமைச்சகங்கள் தத்தம் அறிக்கைகளை சமர்ப்பித்துவிட்டன. மீதம் உள்ள அமைச்சகங்களும் புதன்கிழமைக்குள் அறிக்கைகளை சமர்பித்து விடும் என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தண்ணீர் வளங்கள் பங்கீடு, சாலைப் போக்குவரத்து , மனித வள மேம்பாடுகள் மற்றும் அலுவலர்கள் குறித்து அறிக்கைகள் அதற்கு உரிய அரசாங்கத் துறைகளிடம் தீவிர ஆலோசனைக்கு பின்னரே சமர்பிக்கப்பட்டன. இவை நவம்பர் 7 ஆம் தேதி நடக்க உள்ள அமைச்சர்கள் குழுச் சந்திப்பில் கலந்தாராயப்படும்.