'இந்தியாவில் நைஜீரியருக்கு துன்புறுத்தல்' - நைஜீரியத் தூதுவர்

கோவாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நைஜீரியர்கள்
Image caption கோவாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நைஜீரியர்கள்

இந்தியாவில் சுற்றுலா தலமாக திகழும் கோவாவில், நைஜீரியர்களை காவல்துறை தொடர்ந்து இன்னலுக்கு உட்படுத்துவது வருத்தத்துக்குரியது என இந்தியாவுக்கான நைஜீரிய தூதர் துபிசி வைடஸ் அமக்கு தெரிவித்துள்ளார்.

இவர் இது குறித்து பிபிசியிடம் பேசிய போது இந்தியாவில் வாழும் நைஜீரிய சமுதாயம் அவமானத்துடனும், மனவருத்தத்துடனும் வாழ்வதாகத் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் 50, 000 நைஜீரியர்கள் வாழ்கிறார்கள் இருந்தபோதும் நைஜீரியாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் வசிப்பதையும் மறந்துவிடக் கூடாது எனவும் கூறினார். இருநாட்டு நல்லுறவையும் பேணி காக்க வேண்டிய அவசியத்தையும் புரிந்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுடெல்லியில் உள்ள நைஜீரியத் தூதரகத்தின் அதிகாரிகள் கோவாவில் தங்கியுள்ள நைஜீரிய நாட்டவர்களை சந்தித்துப் பேசினர். பின்னர் தூதரகத்தின் நிர்வாக அதிகாரியான ஜேகப் வடிபியா, கோவா மாநிலத்தின் காவல்துறை பொது இயக்குனரான கிஷன் குமார் மற்றும் வடக்கு கோவா எஸ்.பி.யான பிரியங்கா காஷ்யப் ஆகிய இருவரையும் திங்களன்று சந்தித்தார்.

நைஜீரிய நாட்டவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளியிட்டார். நைஜீரிய மக்கள் பாரபட்சமாக நடத்தப்படவில்லை என்று கோவா போலிஸ் அதிகாரிகள், தூதரக அதிகாரியிடம் கூறியுள்ளார். பொது உத்தரவின்பேரில் கோவாவில் தங்கியுள்ள எல்லா வெளிநாட்டவர்களின் ஆவணங்களும் சோதனையிடப்படுவதாகவும் போலிசார் கூறியிருக்கின்றனர்.

அரசியல்வாதிகள் செய்யும் அனைத்து தவறுகளுக்கும் மற்றவர்கள் மீது பழி சுமத்துவது சரியல்ல என்றும் நைஜீரிய தூதர் துபிசி வைடஸ் அமக்கு குறிப்பிட்டார். மேலும், இந்தச் சம்பவங்கள் குறித்த அவரது அதிருப்தியை பத்திரிகையாளர்களிடமும் அவர் வெளியிட்டுள்ளார்.