இளவரசர் சார்லஸ், கமிலா இந்தியா விஜயம்

இந்தியாவில் இளவரசர்
Image caption இந்தியாவில் இளவரசர்

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி, சீமாட்டி கமிலா ஆகியோர் இன்று இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள தேராதூன் சென்றனர்.

தேராதூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி மற்றும் வன ஆராய்ச்சி அகாடமி ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்த இவர்களுக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவில் ஒன்பது நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இவர்கள் நேற்று தில்லி வந்தடைந்தனர்.

பின்னர் நேற்று மாலை ரிஷிகேஷ் சென்றனர். அங்கு கங்கை நதிக்கரையில் ஆரத்தி பூஜை செய்த பின்பு அங்குள்ள சில ஆச்சிரமங்களுக்கும் விஜயம் செய்தனர்.

அப்போது இளவரசர் சார்லஸ், நதிகளை தூய்மையாகப் பேணி காக்க வேண்டிய அவசியம் குறித்தும், இயற்கை வளங்களை பாதுகாப்பத்தை வலியுறுத்தியும் பேசினார்.

இவர்களது சுற்றுப்பயணத்தின் போது இயற்கை வளங்களை பாதுகாப்பது, கல்வி, வளரும் வர்த்தக உறவுகள், பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், திறமைக்கான பயிற்சி போன்ற துறைகளில் இங்கிலாந்தும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு செல்லும் அவர்கள் நவம்பர் 14-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

நவம்பர் 8-ஆம் தேதி தில்லியில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ளும் இவர்கள், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

பின்னர் நவம்பர் 9 முதல் 11 வரை மும்பையிலும், நவம்பர் 11 முதல் 14 வரை கொச்சியிலும் பல்வேறு நிகழ்சிகளிலும் பங்கேற்கின்றனர்.

தில்லியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய ஹிந்துக் கோவிலுக்கு செல்லும் இவர்கள், கொச்சியில் பழமை வாய்ந்த யூதர்களின் வழிப்பாட்டுத் தளத்திற்கும் செல்லவிருக்கிறார்கள்.

மேலும் மும்பையில் பாலிவுட் நட்சத்திர விருந்திலும் கலந்து கொள்வார்கள்.

இளவரசர் சார்லஸ் இதுவரை ஏழு முறை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இவருடன் இணைந்து சீமாட்டி கமீலா 2006 மற்றும் 2010-க்கு பிறகு மூன்றாவது முறையாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.