கௌஹாத்தி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடையாணை

Image caption இந்திய உச்சநீதிமன்றம்

இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ அரசியலமைப்புக்கு முரணாக இயங்குவதாக கௌஹாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளது.

கெளஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல்செய்த மேன்முறையீட்டை உச்சநீதிமன்றம் அவசரமாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.

இந்தியாவின் தலைமை நீதியரசர் பி. சதாசிவம் முன்பாக அவரது இல்லத்தில் வைத்து இந்த மேன்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது.

கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, சிபிஐ அமைப்பால் நடத்தப்படும் 1,000 விசாரணைகளும் சுமார் 9,000 நீதிமன்ற விசாரணைகளும் நேரடியாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருந்ததாக மத்திய அரசு தனது மேன்முறையீட்டில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

Image caption கௌஹாத்தி நீதிமன்ற தீர்ப்பு காரணமாக சிபிஐ சம்பந்தப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணைகள் பாதிக்கப்படும்- மத்திய அரசு

அசாம் மாநிலத்தில் உள்ள கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பென்ச் ஒன்று, மத்திய புலனாய்வுத்துறை நிறுவப்பட்ட முறைமையும் அதன் செயற்பாடுகளும் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளித்திருந்தது.

சிபிஐ அமைப்பை ஒரு காவல்துறை அமைப்பாகக் கருதமுடியாது என்று கெளஹாத்தி நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கொன்றை பதிவுசெய்யவோ, குற்றஞ்சாட்டப்படும் ஒருவரைக் கைதுசெய்யவோ, தேடுதல் நடத்தவோ, பொருட்களை கைப்பற்றவோ அல்லது வழக்குத் தொடரவோ சிபிஐ-க்கு அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறான செயற்பாடுகள் அரசியலமைப்பின் 21-ம் பிரிவை மீறுவதாக அமையும் என்றும் கெளஹாத்தி நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறியது.

இந்த நிலையிலேயே, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதியரசர் முன்பாக மத்திய அரசு அவசரமாக மேன்முறையீட்டை தாக்கல்செய்தமை குறிப்பிடத்தக்கது.