கொழும்பு மாநாட்டை இந்தியா முற்றாகப் புறக்கணிக்க வேண்டும்: தமிழகத் தீர்மானம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றினை முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இன்று செவ்வாய் முன்மொழிந்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவை வளாகம்
இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும், பெயரளவிற்குக் கூட இந்திய நாட்டின் சார்பாக பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த இந்தியாவின் முடிவை உடனடியாக இலங்கை நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும், வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இலங்கை நாட்டை தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்ட மன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டும், அதற்கு முற்றிலும் முரணான வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டிற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு செல்கிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ள முடிவிற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாக இன்றைய தீர்மானம் கூறுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா
தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்காத, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசின் இந்த முடிவு மிகுந்த மனவேதனை அளிக்கும் செயலாகும் எனவும் இன்றையத் தீர்மானம் சுட்டிக்காட்டுகிறது.
காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதன் மூலம் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை, மனிதநேயம் அற்ற செயலை, இந்தியா ஏற்றுக் கொள்கிறது, அங்கீகரிக்கிறது, என்ற நிலை தான் உருவாகும் எனவும் கூறும் அந்த அறிக்கை, அது மட்டுமல்லாமல், காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இலங்கை அதிபர் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பதற்கு உறுதுணையாக இருந்தது என்ற தீராப் பழிச் சொல் இந்தியாவிற்கு ஏற்படும் எனவும் மேலும் கூறுகிறது.
இப்படிப்பட்ட, தீராப் பழிச்சொல் இந்திய நாட்டிற்கு ஏற்படுவதை தமிழர்களால் ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ இயலாது எனவே, தமிழக மக்களின் ஒருமித்த கருத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இலங்கையில் நாளை நடைபெறவிருக்கும் வெளியுறவுத் துறை அமைச்சர்களுக்கான கூட்டத்திலோ, அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள காமன்வெல்த் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டிலோ பெயரளவிற்குக் கூட இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது, இந்த காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது.