சிபிஐ தலைவரின் பாலியல் வல்லுறவுக் கருத்துக்கு எதிராக பெரும் ஆத்திரம்

ரஞ்ஜித் சின்கா
Image caption ரஞ்ஜித் சின்கா

பெண் அமைப்புக்களின் விமர்சனங்களை அடுத்து, பாலியல் வல்லுறவு குறித்து தான் கூறிய கருத்துக்காக இந்தியாவின் உயர் புலனாய்வு அமைப்பின் தலைவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.

சட்டவிரோதமான விளையாட்டுச் சூதாட்டம் குறித்து பேசிய பொழுதே சிபிஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வுத் துறையின் தலைவரான ரஞ்ஜித் சின்கா அவர்கள், இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

''நீங்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் போது, அதனைத் தடுக்க முடியாவிட்டால் அதனை சந்தோசமாக அனுபவித்து விடுங்கள் என்பது போல, விளையாட்டு மீதான சூதாட்டம் குறித்த தடையை உங்களால் அமல்படுத்த முடியாவிட்டால், அதனை அனுமதித்துவிடுங்கள்'' என்று அவர் கூறியிருந்தார்.

இந்தக் கூற்று இந்தியாவெங்கிலும் கடுமையான கோபத்தை கிளறியுள்ளது.

கடந்த வருடம் ஒரு பெண் பஸ்ஸில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்த போராட்டங்களால், இந்த மக்கள் கோபம் மேலும் உக்கிரமடைந்துள்ளது.