சென்னையில் சீரமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் திறப்பு

  • 14 நவம்பர் 2013
Image caption சீரமைக்கப்பட்ட சென்னை கலங்கரை விளக்கம்

சென்னையில் கடற்கரையோரம் அமைந்துள்ள புகழ்மிக்க கலங்கரை விளக்கத்தினை பொதுமக்கள் பார்வைக்காக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் இன்று புதன் திறந்து வைத்தார்.

கலங்கரை விளக்க வளாகத்திலேயே அமைந்திருக்கும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தையும் வாசன் துவக்கி வைத்தார்.

45 மீட்டர் உயரத்தில் 10 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தின் உச்சியில் நின்று சென்னை நகரையும் வங்கக்கடலில் எழும் அலைகளையும், கப்பல்கள் நகர்வதையும் பார்ப்பது ஒரு பரவசமான அனுபவம்

இக்கலங்கரை விளக்கம் 1977ஆம் ஆண்டு அன்றைய மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் ஜி.எஸ்.தில்லானால் துவக்கிவைக்கப்பட்டதாகும்

ஆனால் 1994 க்குப் பிறகு பாதுகாப்புக் காரணங்களுக்காக மெரினா கலங்கரை விளக்கத்தில் ஏறி நின்று சென்னை நகரின் அழகை ரசிக்க பொதுமக்கள் வழங்கப்படவில்லை.

19 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, குழந்தைகள் நாளில் புதுப்பொலிவுடன் விளங்கும் மெரினா கலங்கரை விளக்கத்திற்குள் நுழைந்து நகரின் அழகினை கண்டு களிக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஏறத்தாழ ரூ.1 கோடி செலவில் கலங்கரை விளக்கம் சீரமைக்கப்பட்டிருக்கிறது.

10–வது மாடியில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதாக செல்வதற்காக, பழைய மின் தூக்கி (‘லிப்ட்’) மாற்றப்பட்டு, அதிவேக புதிய ‘லிப்ட்’ பொருத்தப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கலங்கரை விளக்கத்தை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்