கேதார்நாத் ஆலய சீரமைப்பின் முதல்கட்ட பணிகள் முடிந்தன

Image caption மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆலயம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் பெய்த கனமழையால் சேதமுற்ற கேதார்நாத் கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளை மறுசீரமைக்கும் பணியில் முதல் கட்டம் நிறைவு பெற்றுள்ளதாக தொல்லியல் ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த கனமழையால் உத்தராகண்ட் மாநிலத்தில் பல பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது, இதனால் எண்ணற்ற உயிர் சேதங்களும் ஏற்பட்டன.

இந்த சீர்குலைவுக்கு பிறகு கேதார்நாத் கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளை சீரமைக்கும் பணியினை மத்திய அரசு தொல்லியல் ஆய்வு கழகத்திடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Image caption இயற்கை சீற்றத்தின் தாக்கம்

கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணியினை பல்வேறு கட்டங்களாக பிரித்தனர். கோவிலின் பழமையை பாதுகாக்கவும், சுற்றுப்பகுதிகளில் சேதமடைந்துள்ள கற்களை சீரமைக்கும், சேதமடைந்த கதவுகளை மாற்றியமைக்கும் பணிகளை துவங்கிய இவர்கள் இரண்டு மாதங்களில் முதல் கட்ட சீரமைப்பு பணியினை முடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் குளிர்காலமும் துவங்கியுள்ளதால் கடும் பனியின் காரணமாக வேலைகள் அவ்வப்போது தடைபட்டதாகவும் இதனால் கட்டிட வடிவத்தை பாதுகாக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவத்தனர்.

Image caption கேதார்நாத் ஆலயம்

இரண்டாம் கட்டப் பணிகளுக்கான ஒப்புதல் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப் பெற்றவுடன் கட்டத்தின் வடிவத்தை சீரமைக்கும் பணியையும், சேதமடைந்துள்ள அனைத்து அலங்கார பொருட்களும் சரி செய்யப்படும் என்றும், இரண்டாம் கட்டப் பணிகள் குளிர்காலம் முடிந்த பிறகே அடுத்த ஆண்டில் கோவில் நிர்வாகத்தின் ஆலோசனையை பெற்று தொடங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அடுத்த ஆண்டில் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா என்பது சந்தேகமே என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவத்துள்ளனர்.