இந்தியாவில் பெண்களுக்கான சிறப்பு வங்கி தொடக்கம்

Image caption உஷா அனந்தசுப்ரமணியன்

இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வங்கியான 'பாரதிய மகிளா வங்கியை' 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் பிரதமர் மன்மோகன் சிங் மும்பையில் துவக்கி வைத்தார்

இது நாட்டில் பெண்களின் மேம்பாட்டிற்கான ஒரு முயற்சியாகும் என்று அவர் துவக்க விழாவில் தெரிவித்துள்ளார்.

மும்பையை தொடர்ந்து சென்னை, கொல்கத்தா, பெங்களுரூ போன்ற நகரங்களில் மொத்தம் 7 வங்கி கிளைகளை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மும்பையில் இருந்தவாரே காணொளி மூலம் திறந்து வைத்தனர். விழாவில் நிதி துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்துகொண்டார்.

வங்கியின் நோக்கம் பெண்களுக்கான சிறப்பு சேவை என்றாலும் இதில் ஆண்களும் கணக்கு வைத்து கொள்ளலாம்.

மகளிருக்கான இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 4.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் எனவும், சிறு தொழில் மற்றும் குறுந்தொழில் போன்ற முயற்சிகளுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவ்வங்கியின் தலைவர் உஷா அனந்தசுப்ரமணியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தனி நபர்களுக்கான வங்கி மட்டுமல்ல என்றும், பெண்கள் மேம்பாட்டுக்காக அரசு சிறப்புத் திட்டங்களைக் கொண்டுவரும்போது இந்த வங்கி அதற்கு உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இருக்கும் எட்டு பேரும் மகளிர். அவர்கள் பல்வேறு துறைகளிலிருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சில ஆண்களும் இந்த வங்கியில் ஊழியர்களாக இருப்பார்கள். பல தொலைதூரப் பகுதிகளில் பணியாற்றுவதற்கு பெண்கள் கிடைக்கும்வரை அந்த இடங்களில் ஆண்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் உஷா தெரிவித்தார்.

அடுத்த வருடம் மார்ச் மாத்திற்குள், இந்த வங்கிக்கான மேலும் 25 கிளைகள் துவங்கப்படவுள்ளன.

எனினும் அரசியல் காரணங்களுக்காகவே இப்படியொரு முன்னெடுப்பு அரசால் செய்யப்பட்டுள்ளது என்று பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் விமர்சித்துள்ளனர்.