காமன்வெல்த் மாநாடு: இந்தியப் பங்கேற்புக்கு எதிராக வழக்கு

Image caption காமன்வெல்த் மாநாடு -- இந்திய பங்கேற்பு குறித்து வழக்கு

இந்தியா சார்பில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது சட்டத்திற்கு புறம்பானது என கூறி சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இந்திய உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தின் மாநில சட்டபேரவைத் தீர்மானத்துக்கு எதிராக இந்தியா, இலங்கையின் தலைநகர் கொழும்பில் முன்று நாட்கள் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது சட்டத்திற்கு புறம்பான செயல் என்று சமுக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் வழக்கறிஞர்கள் சுந்தரவதனம் மற்றும் ராஜேந்திரன் இன்று இந்திய உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் இந்த மனுவில் இனி வரும் காலங்களில் இந்தியாவில் மத்திய அரசு இலங்கை தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசின் ஆலோசனை பெற்று, முடிவுகளை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் முன்று நாட்கள் நடைபெற்ற இந்த காமன்வெல்த் மாநாடு முடிவடைந்துள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற போரில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளதாக கூறி மொரிஷியஸ் நாடு புறக்கணிப்பு செய்ததோடு அங்கு நடக்கவிருந்த அடுத்த காமன்வெல்த் மாநாட்டை நடத்த விருப்பம் இல்லை என்றும் அறிவித்தது.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இலங்கையில் மேற்கொண்ட பயணங்களுக்கு பிறகு அவர் கூறிய யோசனைகளையும், வெளியிட்ட அறிவிப்புகளையும் இந்திய அரசியல் கட்சிகளும் வரவேற்றன.

அதே நேரத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை எனவும் விமர்சித்தன.

சர்வதேச சமூகங்கள் குரல் கொடுக்கும் இவ்விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து பல விமர்சனங்களும் எழுப்பப்படும் நேரத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.