ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோடி அரசு இளம் பெண் மீது போலிஸ் கண்காணிப்புக்கு உத்தரவிட்டதா?

Image caption நரேந்திர மோடியும், முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ( நிற்பவர்-- ஆவணப்படம்)

குஜராத்தில் இளம் பெண் ஒருவர் மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போலிசாரை விட்டு சட்டவிரோதமாக உளவு பார்க்க உத்தரவிட்டார் என்ற சர்ச்சை குறித்து அரசியல் சர்ச்சை ஒன்று இந்தியாவில் எழுந்துள்ளது.

அஹமதாபாத்தில் இருந்த அந்தப் பெண்ணின் மீதான இந்தக் கண்காணிப்புக்கு உத்தரவிட்ட முந்தைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த உத்தரவை உயர்போலிஸ் அதிகாரி ஒருவரிடம் பிறப்பிக்கும் போது, இந்த கண்காணிப்பை “ சாஹெப்” சார்பாக பிறப்பிப்பதாகக் கூறினார் என்று ஊடகங்களில் கசியவிடப்பட்ட ஒலிநாடா உரையாடல் ஒன்று கூறுகிறது. “சாகேப்” என்று அவர் குறிப்பிட்டது முதல் அமைச்சர் மோடியைத்தான் என்று ஊடகங்களில் ஊகங்கள் வெளிவந்திருக்கின்றன

இந்த விஷயத்தில் விசாரணை ஒன்றை நடத்த தேசிய பெண்கள் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.

இந்த சர்ச்சை குறித்து பாஜகவின் ஊடகத்தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், இந்தப்பிரச்சினையில், பெண்ணின் தந்தை அந்தப் பெண்ணின் சார்பாகக் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே, அவரது பாதுகாப்புக்காக போலிஸ் கண்காணிப்பு உத்தரவிடப்பட்டது. இதைப் பாராட்டாமல் இதைக் கேள்விக்குள்ளாக்கி, தற்போது திருமணமான அந்தப் பெண்ணின் அந்தரங்க உரிமைகளை ஊடகங்களும், காங்கிரஸ் கட்சியும் பறிக்கின்றன என்றார் .

இந்தியக் கலாச்சாரத்தில் ஒரு பெண் சட்டரீதியான வயதை எட்டியிருந்தாலும் கூட , திருமணமானவராக இருந்தாலும் கூட, அவர் தனது பாதுகாப்புப் பிரச்சினை எழும்போது, தனது தந்தையையோ அல்லது கணவரையோ நாடுவது ஒன்றும் தவறானதல்ல , அப்படித்தான் நடக்கும் என்றார் நிர்மலா. இதை இடது சாரி அல்லது பெண்ணிய நோக்கில் விமர்சிப்பது கேலிக்குரியது அதற்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை என்றார் நிர்மலா.

உள்துறை அமைச்சரே, நிதியமைச்சர் அலுவலகத்தில் தொலைபேசியை ஒட்டுக்கேட்க உத்தரவிட்ட சம்பவம் ஒன்று ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் இந்த விஷயத்தில் காட்டும் ஆவேசம் போலித்தனமானது என்றார் நிர்மலா.