4 தொகுதிகளில் போட்டி: ஜெயாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Image caption தேர்தல் வழக்கில் ஜெயாவுக்கு நோட்டீஸ்

தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக ஒரே நேரத்தில் நான்கு தொகுதிகளில் மனு தாக்கல் செய்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தியத் தேர்தல் விதிகளின்படி ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்.

இதனால் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக ஜெயலலிதா மனு தாக்கல் செய்ததாக கூறி அதை எதிர்த்து திமுக சார்பில் மறைந்த முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்ற வருடம் குப்புசாமி இறந்ததை அடுத்து அந்த வழக்கில் குப்புசாமிக்கு பதிலாக தன்னை மனுதாரராக ஏற்றுக்கொள்ளுமாறு திமுகவின் நாடளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ் விஜயன் நீதிமன்றத்தை கோரினார். ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

எனவே அந்த மனுவை மீண்டும் விசாரிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் ஏ.கே.எஸ் விஜயன்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஹெச்.எல்.தத்தா தலைமயிலான அமர்வுக்கு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்குவிசாரணையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இது குறித்து விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.