ஆருஷி கொலை: பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

Image caption கொலையுண்ட சிறுமி ஆருஷி

டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டில் நடந்த14 வயது சிறுமியின் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் அவளது பெற்றோர் இருவருக்குமே ஆயுள் சிறை தண்டனை வழங்கி இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவத் தம்பதிகளான டாக்டர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வாரின் மகளான ஆருஷி கொலை சம்பவம் நடந்து 5 வருடங்களுக்கு பிறகு பெற்றோரே குற்றவாளிகள் என்று நேற்று காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பளித்திருந்த்து.

இந்த ஆயுள் தண்டனை தவிர, தவறான தகவல்கள் கொடுத்தமைக்காக தந்தை ராஜேஷ் தல்வாருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

அரியதிலும் அரிதான இவ்வகையான கொடூர கொலை புரிந்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்குமாறு சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஆர்.கே.சாய்னி நீதிமன்றத்தில் இன்று வாதாடி இருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி ஆருஷி கொலை செய்யப்பட்டிருந்தார். அவர்களது வீட்டுப் வேலையாளி 44 வயதான ஹேம்ராஜும் கழுத்தில் வெட்டுப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டும், சரியாக சேகரிக்கப்படாமலும் இருந்ததால், நீண்ட காலமாக இந்த வழக்கில் எந்த ஒரு முடிவிற்கும் சிபிஐயால் உடனடியாக வரமுடியாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.