டெஹெல்கா நிர்வாக ஆசிரியர் பதவி விலகினார்

Image caption தொடரும் நெருக்கடியில் டெஹல்கா

டெஹல்கா சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியர் , ஷோமா சௌத்ரி, பதவி விலகியிருக்கிறார்.

சஞ்சிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது,சக பெண் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய பாலியல் புகாரை அடுத்து ஏற்கனவே தருண் தேஜ்பால் பதவியிலிருந்து ஆறு மாதம் தன்னை விலக்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் பதவி விலகியுள்ள ஷோமா சௌத்ரி, பத்திரிகைக்கு இது ஒரு " ஊறு விளையும்" காலம் என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பத்திரிகையில் பாலியல் புகார் குறித்த சர்ச்சை வெளிவந்ததிலிருந்து, ஏற்கனவே அதன் 5 பத்திரிகையாளர்கள் பதவி விலகியிருக்கிறார்கள்.

இந்த மாதத் தொடக்கத்தில் பத்திரிக்கை கோவாவில் நடத்திய, பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்வொன்றின்போது, அப்பத்திரிகையின் ஆசிரியர் , தருண் தேஜ்பால், தன்னை, ஹோட்டல் ஒன்றின் லிப்டில் பாலியல் ரீதியாக தாக்கினார் என்று பெண் பத்திரிகையாளர் ஷோமா சௌத்ரிக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

இந்தப் புகாரின் மீது தான் எடுத்த நடவடிக்கை, அப்பத்திரிகையாளர் விரும்பிய அளவுக்கு இருந்தது என்றும் அதற்கு மேல், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டது என்றும் ஷோமா சௌத்ரி வலியுறுத்தினார்.

தான் இந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பியிருப்பேன் என்றும், ஆனால், அவ்வாறு நீடிப்பது , டெஹெல்காவுக்கு உதவுகிறதா அல்லது ஊறு விளைவிக்கிறதா என்பதைப் பற்றி தன்னால் நிச்சயமாக புரிந்துகொள்ளமுடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Image caption பாலியல் புகாரில் தருண் தேஜ்பால்

இந்த சம்பவத்தை மூடிமறைக்க தான் முயற்சி செய்வதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள் என்றும், தனது பெண்ணியவாத நிலைப்பாட்டுக்கு ஏற்ப தான் நடந்து கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுவதாகவும் ஷோமா கூறினார்.

தனது பல நடவடிக்கைகளை வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட அவர், ஆனால் எதையும் மூடிமறைக்க தான் முயலவில்லை என்றார்.

தன்னுடைய நேர்மையைப் பற்றிய கேள்விகள் டெஹல்காவின் நற்பெயரைப் பாதிப்பதை தான் விரும்பவில்லை என்பதால் பதவியிலிருந்து விலகுவதாக அவர் கூறியிருக்கிறார்.

இதனிடையே, தருண் தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு மீது, டில்லி நீதிமன்றம் ஒன்று நாளை, வெள்ளிக்கிழமை, தீர்ப்பு வழங்கவிருக்கிறது.