தருண் தேஜ்பால் கோவா நீதிமன்றத்தில் ஆஜரானார்

Image caption தேஜ்பாலின் பிணையை நீடிப்பதா என்று நீதிமன்றம் ஆராய்கிறது

சக ஊடகவியாளரான பெண் ஒருவர் மீது பாலியல் குற்றம் புரிந்துள்ளதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள டெஹல்கா சஞ்சிகையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கைதுசெய்யப்படலாம் என்ற அச்சம் இருந்ததால் அவர் இன்று காலை வரை முன் ஜாமீன் பெற்றிருந்தார்.

இந்த ஜாமீனை நீடிப்பதா என்பது குறித்து நீதிமன்றம் ஆராய்ந்துவருகிறது.

தேஜ்பால் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அவர் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்.

'பாலியல் வல்லுறவு' என்ற குற்றத்துக்கான வரையறைக்குள் அவரது குற்றச் செயல் அடங்குவதாக பெயர் குறிப்பிடாத ஒருவர் அவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் டெஹல்கா சஞ்சிகையின் நிர்வாக செய்தியாசிரியர் உட்பட 6 செய்தியாளர்கள் தமது வேலைகளை ராஜினாமா செய்துள்ளனர்.

கோவாவில் நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தருண் தேஜ்பால் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் ஊடகவியலாளர் டெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரிடம் புகார் அளித்திருந்தார்.

அதை தொடர்ந்து கோவா போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.