சிறார் தண்டனை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு

பாலியல் வல்லுறவுச் சம்பவத்தை அடுத்து டில்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன
Image caption பாலியல் வல்லுறவுச் சம்பவத்தை அடுத்து டில்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன

டெல்லியில் ஒடும் பேருந்தில் பலரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோன பெண்ணின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இவ்வழக்கில் பாலியல் தாக்குதலை செய்ததாக ஆறு பேர் மீது குற்றம் சாட்டபட்டது. இதில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். நால்வருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அந்த நால்வரும் மேல் முறையீடு செய்துள்ளனர்.

இதே வழக்கில், குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சந்தேக நபருக்கு குற்றம் புரியும் பொழுது வயது 18 வயதாகியிருக்கவில்லை என்பதால் அவருக்கு சிறார்-குற்றவியல் விசாரணை நீதிமன்றத்தில் 3 ஆண்டுகால தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு தமக்கு ஏற்புடையதாக இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2000-வது ஆண்டில் கொண்டுவரப்பட்ட சிறார் குற்றவாளிகள் தொடர்பான சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை குற்றவியல் நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதிப்பதாக அமைவதாகவும் அதனால் இந்தச் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.