ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெருவெற்றி

  • 8 டிசம்பர் 2013
Image caption அதிமுக வேட்பாளர் சரோஜா பெருவெற்றி

சேலம் மாவட்டம், ஏற்காடு சட்ட மன்ற இடைத்தேர்தலில் அஇ அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அக் கட்சியின் வேட்பாளர் சரோஜா 1,427,65 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளரைவிட 78,112 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் மாறன் 64,653 வாக்குகள் பெற்றார். 4,431 வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பவில்லை.

ஏற்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த அஇ அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் கடந்த ஜூலையில் உயிரிழந்தார். இதையடுத்து அங்கே இடைத்தேர்தல் நடைபெற்றது. வெற்றிபெற்ற அஇ அதிமுக வேட்பாளர் பி.சரோஜா மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவியாவார்.

கடந்த டிசம்பர் நான்காம் நாள் நடந்த வாக்குப் பதிவில், மொத்தம் 2.35 லட்சம் வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில், ஏறத்தாழ 90 சத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இடதுசாரிக் கட்சிகள் அ இஅதிமுகவை ஆதரித்தன. ஆனால் காங்கிரஸ், பாரதீய ஜனதா, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கென இறுதிவரை கூறவே இல்லை.

ஜெயலலிதா நன்றி

Image caption முதல்வர் ஜெயலலிதா

இந்நிலையில் ஏற்காடு தேர்தல் ஏறத்தாழ நேரடி போட்டியே. அ இஅதிமுக பிரச்சாரத்தினை முதல்வர் ஜெயலலிதாவும் திமுக பிரச்சாரத்தை கட்சித் தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் முன்னின்று நடத்தினர்.

ஏற்காடு முடிவு தனது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி எனக் கூறிய முதல்வர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

திமுக தலைவர் மு கருணாநிதி, அதிகார துஷ்பிரயோகத்திற்கும் ஆளும் கட்சியின் பண பலத்திற்கும் கிடைத்தவெற்றி அது எனக் கூறியிருக்கிறார்.

ஆனால் இருவருமே வடமாநிலத்தில் பாரதீய ஜனதா ஈட்டியிருக்கும் பெரும் வெற்றி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாஸும் மதிமுக பொதுச் செயலர் வைகோவும் வட மாநிலத் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குக் கட்டியம் கூறும் வகையில் அமைந்துள்ளன எனக் கூறியிருக்கின்றனர்.

அவர்களும் ஏற்காடு வெற்றி விலைகொடுத்து வாங்கப்பட்டதாகும் எனவும் வாதிட்டிருக்கின்றனர்.

இந்தச் செய்தி குறித்து மேலும்