15-ஆண்டு முதல்வர் ஷீலாவை வீழ்த்தினார் புதுமுகம் கெஜ்ரிவால்

Image caption அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ள ஷீலா தீக்ஷித்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் தோற்கடித்துள்ளார்.

முதல் முறையாக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சுமார் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஷீலா தீக்ஷித்தை வீழ்த்தியுள்ளார்.

டெல்லியில் கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் வென்று, 15 ஆண்டுகளாக டெல்லி முதமைச்சராக இருந்து வந்த ஷீலா தீக்ஷித்தை எதிர்த்து புது டில்லி தொகுதியில் கெஜ்ரிவால் போட்டியிட்டார்.

அரவிந்த் கேஜ்ரிவால் 44269 வாக்குகள் பெற்ற நிலையில், ஷீலா தீக்ஷித்தால் 18405 வாக்குகளையே பெறமுடிந்தது.

Image caption டில்லியில் காங்கிரஸ் முதற்தடவையாக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

இந்நிலையில், இன்று காலை டெல்லி முதலமைச்சர் ஷீலா தீக்ஷித் தன் பதவியை இராஜினாமா செய்வதாக டெல்லி துணைநிலை ஆளுனருக்கு இன்று 8 ஆம் தேதி காலை கடிதம் அனுப்பியுள்ளார்.

காலையில் நடந்த முதற்கட்ட வாக்கு முடிவுகளில், தான் பின் தங்கியிருப்பதை கவனித்தவுடனேயே ஷீலா தீக்ஷித் இராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டார்.

தனது தோல்வி குறித்து பேசுகையில், கடந்த 15 ஆண்டுகளாக தமக்கு ஆதரவை அளித்துவந்த டில்லி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஷீலா தீக்ஷித் கூறினார். இதுதவிர வேறு எந்த கருத்தையும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

டில்லியில் இந்திய நேரம் மாலை 5.00 மணி நிலவரப்படி, பாஜக 26 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 21 தொகுதிகளிலும், கங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன.

இவ்வாறு டில்லியில் பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது நிலைக்குத் தள்ளப்படுவது வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி குறித்து மேலும்