ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிமுகம்

Image caption அதிமுக வெற்றிமுகம்

சேலம் மாவட்டம் ஏற்காடு சட்ட மன்ற இடைத்தேர்தலில் தற்போதைய தகவல்களின்படி ஆளும் அ.இ அ தி.மு.க,. 57,246 வாக்குகள் பெற்று, 29 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குக்கள் முன்னிலையில் உள்ளது.

தி.மு.க., 27,823 பெற்றுள்ளது.

யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை ( நோட்டா ) என 1816 பேர் பதிவு செய்துள்ளனர்.

இத்தொகுதியில் அஇஅதிமுக சார்பில் பி.சரோஜாவும் திமுக சார்பாக இளைஞரணி நிர்வாகி வி மாறனும் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவில், மொத்தம் 2.35 லட்சம் வாக்காளர்கள் உள்ள இத்தொகுதியில், ஏறத்தாழ 90 சத வாக்குக்கள் பதிவாகியிருந்தன.

ஏற்காடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ இஅதிமுகவைச் சேர்ந்த பெருமாள், கடந்த ஜூலையில் உயிரிழந்தார். இதையடுத்து அங்கே தேர்தல். அஇ அதிமுக வேட்பாளர் பி.சரோஜா மறைந்த சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவியாவார்.

இடதுசாரிக் கட்சிகள் அ இஅதிமுகவை ஆதரித்தன. பாமக போட்டியிடவில்லை, அது தனது ஆதரவை எந்தக்கட்சிக்கும் வழங்கவில்லை.

ஆனால் காங்கிரஸ், பாரதீய ஜனதா, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள் .தங்கள் ஆதரவு யாருக்கென இறுதிவரை கூறவே இல்லை.

Image caption திமுக வேட்பாளர் மாறன்

ஒன்பது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தேர்தல்களில் கூட திமுகவுடனேயே கை கோர்க்கலாம் என்ற நிலையிலும் காங்கிரஸ் மௌனமே சாதித்தது.

காங்கிரஸ் வட்டாரங்கள் வட மாநிலத் தேர்தல்கள் காரணமாக ஏற்காடு குறித்து சிந்திக்கமுடியவில்லை எனத் தெரிவித்தன.

நாடாளுமன்றத் தேர்தல்களுக்கு முன்போ பின்னரோ திமுக அல்லது அ இஅதிமுக இரண்டில் ஒன்றுடன் கூட்டணி வைக்க பாரதீய ஜனதா விரும்பக்கூடும் எனப் பரவலாகப் பேசப்பட்டாலும் அதுவும் வட மாநிலத்தேர்தல்களைக் காரணம் காட்டி எக்கட்சிக்கு ஆதரவு என்பதை அறிவிக்கவே இல்லை.

அ இஅதிமுக பிரச்சாரத்தினை முதல்வர் ஜெயலலிதாவும் திமுக பிரச்சாரத்தை கட்சித் தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் முன்னின்று நடத்தினர்.